குயின் ரீமேக் கைவிடப்படவில்லை: படக்குழு புதிய தகவல்

குயின் ரீமேக் கைவிடப்படவில்லை: படக்குழு புதிய தகவல்
Updated on
1 min read

தமிழில் 'குயின்' ரீமேக் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார்.

தமிழில் கங்கனா ராவத் வேடத்தில் நடிக்கவிருந்த தமன்னா, இப்படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை மற்ற படங்களுக்கு ஒதுக்கினார். இதனால் 'குயின்' ரீமேக் கைவிடப்பட்டது என தகவல் வெளியானது.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "முதலில் 'குயின்' தமிழ் ரீமேக் கைவிடப்படவில்லை. 4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகவுள்ளது. ஆகையால் தமிழ் ரீமேக்கிற்கு ஒதுக்கப்பட்ட பொருட்செலவில், தமன்னாவின் சம்பளத்துக்கு ஒத்துவரவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நாயகி நடிப்பார்.

மேலும், ரேவதி - சுஹாசினி இருவருமே தமிழ் ரீமேக்கிற்கான பணிகளை முடித்துவிட்டார்கள். மற்ற மொழிகளில் இயக்குவது யார் என்பது குறித்து பேசிவருகிறோம். விரைவில் மொத்தமாக பிரம்மாண்டமான அறிவிப்பு வரும்" என்று தெரிவித்தார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in