

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிக்கும் 'மதுர வீரன்' படப்பிடிப்பை சென்னையில் விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
சுரேந்திரன் இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் 'சகாப்தம்'. கார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அப்படத்தைத் தொடர்ந்து அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் 'தமிழன் என்று சொல்' படம் தொடங்கப்பட்டது. விஜயகாந்த், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்க இருந்த இப்படம் பிறகு கைவிடப்பட்டது.
இந்நிலையில், அடுத்த படத்துக்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் சண்முகபாண்டியன். இறுதியாக ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கூறிய கதை பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தமானார்.
'மதுர வீரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு எப்போது என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், சென்னையில் 'மதுர வீரன்' படப்பிடிப்பை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இப்படத்தில் சண்முகபாண்டியனோடு சமுத்திரக்கனி, பால சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். அனைவருமே படப்பூஜையில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் விஜயகாந்த் தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார்.