

தர்மேந்திரா, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'ஷோலே 3டி' படத்தினை ஜனவரி 2014ல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்திய திரையுலகில் வெளியான படங்களில் முக்கியமான படங்களை பட்டியலிட்டால், அதில் தவறாமல் இடம்பிடிக்கும் படம் 'ஷோலே'.
ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15, 1975ல் வெளியானது 'ஷோலே'.
படம் வெளியாகி முதல் 2 வாரங்களுக்கு வசூல் குறைவாகவே இருந்தது. 3ம் வாரத்தில் இருந்து வசூல் மழை கொட்டியது. அதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது ‘ஷோலே’.
சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 15 கோடி வரை வசூல் செய்ததாக சொல்கின்றன பாலிவுட் வட்டாரங்கள். அதுமட்டுமன்றி 100 திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது ஷோலே. இந்த சாதனையை ஷாருக்கானின் 'Dilwale Dulhania Le Jayenge' திரைப்படம் முறியடித்தது.
தற்போது இப்படத்தினை 3டியில் உருவாக்கி வருகிறார்கள். அமிதாப்பின் 71வது பிறந்தநாளுக்கு ’ஷோலே 3டி’யை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் அப்படம் வெளியாகவில்லை.
3டி படத்தினை உருவாக்கியுள்ள ஜெயிந்திலால் ஹடா “தற்போது பெரிய படங்கள் வருகையால் ஜனவரி 2014ல் வெளியிடத் தீர்மானித்துள்ளோம். திரையரங்குகளின் உரிமையாளர்களை தொடர்ச்சியாக 4 வாரங்களுக்காவது திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
'ஷோலே' படத்தினை 3டி-க்கு மாற்ற சுமார் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.