

'மாநகரம்' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.
புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநகரம்'. ரியாஸ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். மார்ச் 10-ம் தேதி இப்படம் வெளியானது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், குறைவான திரையரங்குகளில் வெளியானாலும், முதல் நாள் கூட்டமும் குறைவாக இருந்தது. பலரும் இப்படத்தை பாராட்டவே, திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு, கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.
மேலும், ரஜினிகாந்தும் இப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இருவருக்கும் தொலைபேசியில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது, "தற்போது உங்களுக்கு ஒரு போன் வரும். எடுக்காமல் இருந்து விடாதீர்கள் என்று தயாரிப்பாளர் கூறினார். யார் அழைப்பார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு போன் வந்தது. ரஜினி சார் பேச விரும்புவதாக தெரிவித்தார்கள். "கண்ணா.. படம் பார்த்தேன். கலக்கிட்டீங்க. சூப்பர். நல்ல படம். சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தைப் பார்த்தேன். கலக்கும்மா" என்று தெரிவித்தார். அவருடைய வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நன்றி மட்டும் கூறிக்கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் லோகேஷ். இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.