

தனது 3வது படமாக தமிழ் படமொன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'நேரம்' மற்றும் 'ப்ரேமம்' ஆகிய படங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இறுதியாக அவர் இயக்கிய 'ப்ரேமம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார் அல்போன்ஸ் புத்திரன். மேலும், சிம்புவை நாயகனாக வைத்து அல்போன்ஸ் புத்திரம் படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தனது அடுத்த படம் தமிழில் தான் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
"புதுமை எதுவும் இல்லாத மூன்றாவது திரைப்படம் ஆரம்பிக்கப் போகிறேன். இதில் நடிப்பதற்கு பாட்டு பாடவும், நடிக்கவும் தெரிந்த 16 - 26 வயதுக்குள் ஒரு பெண் தேடுகிறோம். 2 உதவி இயக்குநர்கள் தேடுகிறோம். அதில் ஒரு ஆண் மற்றும் பெண் வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும், தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும். இப்போது நான் எழுதும் தமிழும், ஆங்கிலமும் புரிகிற ஆளாக இருக்க வேண்டும். படத்தில் நடிக்கவுள்ள மற்றும் பணிபுரிகிற ஆட்கள் யார் என்பதை பின்னர் சொல்கிறேன். ஆனால் கண்டிப்பாக தமிழ் படம் தான்" என்று தெரிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.