

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தைப் பார்த்துவிட்டு லாரன்ஸை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினி.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார்.
பல்வேறு பிரச்சினைகளை கடந்து, இப்படம் வெளியாகியுள்ளது. மேலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் தலைப்பில் லாரன்ஸ் பெயருக்கு முன்பு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பெயர் இடம்பெற்றதால், சமூக வலைதளத்தில் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதற்கு இயக்குநர் சாய்ரமணி மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தைப் பார்த்துவிட்டு லாரன்ஸுக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த ஆசான், எனக்கு ராகவேந்திரரை அறிமுகப் படுத்திய குரு!
எனக்குள் நடிப்பும், ஸ்டைலும் உருவாக காரணாமாக இருந்த வழிகாட்டி.. இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார்! 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை பார்த்து மனதார பாராட்டிய என் அண்ணனுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.