

வயோதிகம் காரணமாக, இனிமேல் திரைப்படங்களுக்காக பாடப் போவதில்லை என்று பழம்பெரும் பாடகி ஜானகி அறிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி. இதுவரை சுமார் 45,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
1957ம் ஆண்டு பாடகியாக தனது பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 4 தேசிய விருதுகள், 32 வெவ்வேறு மாநிலத்தின் விருதுகளை வென்றிருக்கிறார். 2013ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்தது. ஆனால், தனக்கு இது தாமதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது என விருதை மறுத்துவிட்டார்.
தற்போது இனிமேல் பாடல்கள் பாடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஜானகி. இது குறித்து ஜானகி, "4 மாதங்களுக்கு முன்பாக பாட வேண்டாம் என நிறுத்திவிட்டேன். மலையாளத்தில் மிதுன் இசையமைப்பில் ஒரு பாடலை இறுதியாக பாடினேன். வெவ்வேறு விதமான பாடல்கள் நிறைய மொழிகளில் பாடிவிட்டேன். சினிமாத்துறை எனக்கு முழு திருப்தி அளித்திருக்கிறது.
78 வயதாகிவிட்டது, இன்னும் நானே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? மற்றவர்கள் பாடட்டுமே. நான் பாடுவதை நிறுத்தியப் பிறகும் வாய்ப்புகள் வந்தது. நான் பாடுவதை நிறுத்துவிட்டேன் என சொல்லிவிட்டேன். அனைத்து மொழிகளிலும் அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறேன். நான் பாடவில்லை என்றாலும் என்னுடைய ரசிகர்கள் எனது பாடலைக் கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார் ஜானகி.