இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்

இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்
Updated on
1 min read

இனி நீங்கள் மாணவர்கள் அல்ல ஆசான். நான் உங்களின் ரசிகன் என்று இளைஞர்கள் போராட்டம் குறித்து கமல் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, இளைஞர்களின் போராட்டத்தில் பங்கெடுத்து நடிகர்கள் ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார் கமல். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பது, "சபாஷ்! தமிழக மக்களே. இந்தப் போராட்டம் அதிருப்தியின் வெளிப்பாடு. இனி காயங்களுக்கு தேவை கட்டு அல்ல அதை நிரந்தரமாக குணமாக்க வேண்டும்.

போதும்..போதும் என்ற அளவுக்கு நாம் புண்பட்டு விட்டோம். இப்போது நடைபெறும் போராட்டத்தால் உலகமே நம்மை உற்று கவனிக்கிறது. இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கின்றனர் தமிழர்கள். உங்கள் கொள்கைகளில் விடாப்பிடியாக இருங்கள்.

ஒத்துழையாமை இயக்கத்துக்கான கொள்கை விளக்கம் 1930-ல் சென்னையில் வடிவமைக்கப்பட்டது. அந்த வரலாறு இப்போது திரும்பியுள்ளது. 2017-ல் தமிழகத்தில் மீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்கம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி இருக்கிறது. அதில், அவர்களின் தேவைக்கேற்ப செய்திகளை திரித்துக் கொள்ள முடியும். எனவே உங்கள் எண்ண ஓட்டங்களை அத்தகைய செய்திகள் ஆக்கரிமிக்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோலவே அறவழியில் போராடுங்கள். வன்முறையை ஒதுக்கி வையுங்கள். இப்போராட்டம் மக்களால் ஆனது. இத்தருணத்தில் பிரபலங்கள் தங்கள் ஆதரவை மட்டும் தெரிவித்தாலே போதுமானது. களத்தில் இறங்கி கவனத்தை திசை திருப்ப வேண்டாம்.

நான் செய்திகளை பார்ப்பது எம்மக்கள் போராட்டக் களத்தில் கூடியிருப்பதை காணவே. கண்கள் கலங்குகின்றன. நன்றி. இனி நீங்கள் மாணவர்கள் அல்ல ஆசான். நான் உங்களின் ரசிகன்" என்று தெரிவித்துள்ளார் கமல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in