

நயன்தாரா தொடங்கி அஸின், அமலா பால், நஸ்ரியா, நித்யா மேனன் என்று பல மலையாள நடிகைகள் கோலிவுட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கோலிவுட்டில் இருந்து மலையாளக் கரையோரம் ஒதுங்கியிருக்கிறார் ஜனனி ஐயர்.
மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ‘கூத்தரா’, ‘நேரம்’ படத்தின் ஹீரோ நிவினுடன் ‘எடிசன் ஃபோட்டோ’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜனனி ஐயர். சென்னைக்கும் கேரளத்துக்குமாக பறந்துகொண்டிருந்த அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
நஸ்ரியா, லட்சுமி மேனன் என்று மலையாள நடிகைகள் தமிழுக்கு வந்துகொண்டிருக்க, நீங்கள் ஏன் மலையாள சினிமாவுக்கு சென்றுவிட்டீர்கள்?
அங்கு நல்ல படங்களில் எனக்கு வாய்ப்புகள் அமைகிறது. அதோடு சினிமாவைக் கற்றுக்கொள்ளவும் முடிகிறது. இதற்காக நான் மலையாளப் படங்களில் மட்டுமே நடிப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தமிழிலும் மூன்று படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதுமே தமிழ்ப்படங்களை விட்டு போகமாட்டேன்.
மோகன்லாலுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி?
‘கூத்தரா’ படத்தில் முஸ்லிம் வீட்டுப் பெண்ணாக வருகிறேன். இந்தப்படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். ‘நேரம்’ நிவின் நடிக்கும் ‘எடிசன் ஃபோட்டோ ’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.
மலையாளத் திரையுலகம் உங்களை ஆசீர்வதித்திருக்கிறது என்று சொல்லலாமா?
நிறைய மெனக்கெடல்களை கொடுக் குறாங்க. அங்கும் திரைப்படங்களின் போக்கு வெகுவாகவே மாறிக்கொண்டு வருகிறது. மலையாளத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால் மற்ற 4 தென்னிந்திய மாநிலங்களிலும் அதற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் நானும் அங்கு பங்களிக்கிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மலையாளப் படத் துறையில் பணிபுரிவது, மழையில் நனைகிற மாதிரியான மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இரண்டு நாட்கள் வெளிப்புற படப்பிடிப்பு என்றாலே, நடிகைகள் வீட்டை, ஊரை மிஸ் பண்ணுவதாக சொல்வார்கள். உங்கள் விஷயத்தில் எப்படி?
கண்டிப்பா... அம்மாவோட சாப்பாடு, தோழிகள் எல்லாவற்றையும் இழக்கிறேன். இருந்தாலும் கேரளாவின் இயற்கை அழகும், உணவும் இதைக் கொஞ்சம் மறக்கடிக்கிறது.
நிறைய திறமைகளுடன் பல நாயகிகள் அறிமுகமாகிட்டே இருக்காங்களே?
அதுதானே வேணும். ஐந்து பேரில் தொடங்கி பத்து பேரில் முடிந்துபோகிற துறை இல்லையே சினிமா. திறமையும் அதிர்ஷ்டமும் இருந்தால் போதும் என்பது என் அனுபவம்.
‘கதைக்கு அவசியம் என்றால் கிளாமர் ஓ.கே!’ என்று பேட்டி கொடுக்கிறார்களே? நீங்கள் எப்படி?
ஒவ்வொரு நடிகையும் அவரவர் ஸ்டைலில் தெளிவாக இருக்க வேண்டும். ஸ்ரேயா, கிளாமர் உடைகள் அணியும்போது ரொம்பவே அழகா இருப்பாங்க. அவங்களோட உடல் அமைப்புக்கு அது நல்லா இருக்கு. அப்படித்தான் கிளாமர் கேரக்டரை எல்லோருமே தேர்ந்தெடுக்குறாங்க. எனக்கு கிளாமர் ‘செட்’ ஆகாது. நடிப்பில் மட்டும் நிறைய கவனம் செலுத்துவோம்னு இருப்பேன். என்னோட வேலைகளை சரியா செய்றேன். நல்ல பாராட்டுதலோட சில படங்கள் செய்தாலே எனக்குப் போதும்.