

நாம் வாழும் இந்த உலகைத் தவிர்த்து வேறொரு உலகம் இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் கற்பனையான பயணத்தை ஒரு திரைப்பட அனுபவமாக மாற்ற இயக்குநர் செல்வராகவன் முயற்சி செய்துள்ளார். ஆயிரத்தில் ஒருவனில் காலவெளியின் எல்லைகளைத் தாண்டி வித்தியாசமான பயணத்தைச் சாத்தியப்படுத்திய இயக்குநர் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இரண்டாம் உலகில் நுழையத் தயாராகிறோம்.
தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கும் கோளங்கள், பல வண்ணங்களில் ஜொலிக்கும் மரங்கள், வயல் வெளிகள், மேற்கு உலகில் இருப்பவர்களைப் போன்ற வெள்ளைத்தோல் மனிதர்கள், மன்னர் காலத்து வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தோற்றம் கொள்கிறது இரண்டாம் உலகம். இந்த உலகில் மனிதர்கள் உண்டு, ஈரம் இல்லை. காமம் உண்டு, காதல் இல்லை. பெண்களுக்கு மரியாதை இல்லை. எனவே இந்த உலகில் சுபிட்சம் இல்லை. இங்கே பூ பூக்காது. வளம் கொழிக்காது. இந்த உலகைக் காக்கும் கடவுளாகிய அன்னை, மனித வடிவில் இங்கே வசிக்கிறாள். இந்த உலகில் காதல் என்னும் தளிர் உருவாகும் வழியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.
இரண்டாம் உலகில் இன்னொரு நாடு. இங்கே அரக்க குணம் கொண்ட மனிதர்கள். இந்தக் கடவுளைக் கடத்தி வந்துவிட்டால் தங்கள் நாட்டில் வளம் கொழிக்கும் என்று நினைக்கிறார்கள்.
வீரமும் போர்த்திறமையும் கொண்ட பெண் வர்ணாவை (அனுஷ்கா) வீரமோ புத்திசாலித்தனமோ இல்லாத மறவனுக்கு (ஆர்யா) பிடிக்கிறது ஆனால் அவளோ ஆண் வாடையையே வெறுக்கிறாள். வர்ணாவின் மீதுள்ள ஈடுபாடு மறவனை வீரனாக்குகிறது. ஆனால் காதல் துளிர்க்கவில்லை.
நமது உலகில் மது பாலகிருஷ்ணனுக்கும் (ஆர்யா) ரம்யாவுக்கும் (அனுஷ்கா) இடையே ஆழமான காதல். ரம்யாவின் மரணம் காதலைக் குற்றுயிராக்குகிறது. வாழ்க்கையே வெறுத்துப் போகும் மது தன் காதலியைத் தேடி அலைந்து இரண்டாம் உலகிற்கு வந்துவிடுகிறான். அங்கே காதல் துளிர்த்ததா? எதிரி நாட்டின் படையெடுப்பிலிருந்து மீள முடிந்ததா?
வித்தியாசமான கதைக்ககளங்கள், அழுத்தமான திரைக்கதை, பிரத்யேகமான காட்சியமைப்புகள், யதார்த்தமான பாத்திரங்கள் ஆகிய அம்சங்களைக் கொண்ட படங்களைத் தந்திருக்கும் செல்வராகவனின் இந்த முயற்சி ஏமாற்றம் அளிக்கிறது.
இரண்டாம் உலகை நிறுவுவதற்கான காரணம் எதுவும் இல்லை. அந்த உலகின் சமூகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக்கூடிய சிறிய பழங்குடிச் சமூகங்களைப்போலத்தான் இருக்கிறது. அதில் பேசப்படும் விஷயங்களும் புதிதில்லை. சம்பவங்களிலும் ஈர்க்கும் தன்மை இல்லை. காதல் துளிர்க்கும் தருணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. ஒற்றை ஆளாக ஒரு படையையே அடித்து வீழ்த்தும் சராசரியான வெகுஜன திரைப்பட வீரம்தான் இரண்டாம் உலகிலும் காணப்படுகிறது.
நமது உலகின் காட்சிகள் பார்த்துப் பார்த்துச் சலித்த காதல் நாடகத்தைச் சித்தரிக்கின்றன. மதுவின் காதலை ரம்யா ஏற்றுக்கொள்வதற்குச் சொல்லும் காரணம் அந்தக் காதல் மீது எந்த மரியாதையையும் ஏற்படுத்தத் தவறுகிறது. திடீர் மரணத்தை வைத்துக் கதையின் முடிச்சை முறுக்குவதெல்லாம் மிகப் பழைய உத்தி.
இரு உலகங்களும் சந்திக்கும் புள்ளியும் கவனத்தைக் கவரும் வகையில் இல்லை.
அனுஷ்காவின் சண்டைக் காட்சிகள், ஆர்யாவும் ‘சிங்கமும்’ சண்டையிடும் காட்சி, ரம்யாவாக வரும் அனுஷ்கா தொடக்கத்தில் தன் காதலை வெளிப்படுத்தும் விதம் ஆகிய சில இடங்களே தேறுகின்றன. திரைக்கதையில் தர்க்கமும் புதுமையும் ஈர்க்கும் அம்சங்களும் இல்லை.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. அனிரூத்தின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.
பெண்ணை மதிக்காத உலகில் வளம் இருக்காது, காதல் இல்லாத உலகில் மனிதத்தன்மை இருக்காது என்பதைச் சொல்ல இவ்வளவு செலவுசெய்து இப்படி ஒரு செயற்கையான உலகைக் கட்டமைத்திருக்க வேண்டுமா என்னும் ஆற்றாமை ஏற்படுகிறது.
ராம்ஜியின் கேமரா கோவா, பிரேசில், ரியோ டி ஜெனிரோவின் காடுகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.
ஒரு இயக்குநர் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஓரிரு படங்களைத் தந்த பிறகு புதிய சவால்களை நோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் செலவை அதிகரித்துக் காட்சியமைப்பில் பிரமிக்கவைப்பதன் மூலம்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. இன்னும் பேசப்படாத புதுப்பேட்டைகளும் ரெயின்போ காலனிகளும் நிறைய இருக்கின்றன. அப்படியே பிரமாண்டம்தான் தேவை என்றாலும் அதற்கேற்ற கதையும் திரைக்கதையும் இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாத இரண்டாம் உலகம் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு:
இரண்டாம் உலகில் புதுமையும் இல்லை, பரவசமும் இல்லை.