

கபாலி திரைப்படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருப்பதால் அந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழ்நாடு சினிமா திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தில் 2009-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஏ.சி. வசதி, ஓட்டல், பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸில் குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சம் 120 ரூபாயும் வசூலிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது கட்டண வசூல் தொடர்பான விதிகள் மீறப்படுகின்றன. அதுவும் பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் வெளியாகும்போது முதல் 5 நாட்களுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதன்பிறகுதான் கட்டண குறைப்பு செய்கிறார்கள்.
இந்த நிலையில், வரும் 22-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியாகிறது. இப்படத்துக்கு பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த 15-ம் தேதி தபாலில் புகார் மனு அனுப்பினேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு நிர்ணயித்த கட்டண விவரத்தை வெளியிடாமல் வேண்டுமென்றே மறைக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு மட்டுமில்லாமல் அனைத்து புதுப்படங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலித்து, ரூ.100 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை பொதுமக்கள் பணத்தைச் சுரண்டுகின்றனர்.
எனவே, எனது மனுவை முடித்துவைக்கும் வரை கபாலி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். திரையரங்குகளில் புதிய படம் திரையிடும்போது அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்த நிறுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இம்மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகாரை அதிகாரிகளுக்கு மனுதாரர் கடந்த 15-ம் தேதி தபாலில் அனுப்பியுள்ளார். அந்த மனு அதிகாரிகளிடம் போய்ச் சேர்ந்ததா, இல்லையா என்று அவர் தெரிந்து கொள்ளவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசமும் அளிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே, புகார் மனு அதிகாரிகளுக்கு போய்ச் சேர்ந்ததா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு நீதிமன்றத்துக்கு வரலாம். அவ்வாறு வருவதற்கு மனுதாரருக்கு தடை இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.