எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ சினிமா மட்டும்தான்: விஜய் சேதுபதி

எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ சினிமா மட்டும்தான்: விஜய் சேதுபதி
Updated on
1 min read

விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் ஒரு மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ சினிமா மட்டும்தான் என்று விஜய் சேதுபதி பேசினார்.

தமிழ் தேசிய சலனப் பட நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு திரைப்படத்துறை மற்றும் திரைப்படத்துறை சாராமல் திரைத்துறை வளர்ச்சிக்கு பங்களித்த 100 தொழிலாளர்களுக்கு 100 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

நேற்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இந்நிகழ்வு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உலகாயுதா பவுண்டேஷன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.பி. ஜனநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த நிகழ்வில் 100 மூத்த கலைஞர்களுக்கு ஆளுக்கு 1 பவுன் தங்கம் என்றளவில் 100 பவுன் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதற்கான செலவை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் அமீர், சேரன், கரு.பழனியப்பன், எடிட்டர் மோகன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய அனைவருமே விஜய் சேதுபதிக்கு தங்களுடைய வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பேசிய விஜய்சேதுபதி, "இங்கு பேசிய அனைவருமே விஜய் சேதுபதி கொடுத்தார் என பேசினார்கள். தமிழ் சினிமாவில் இருந்து எடுத்தேன், அதனால் அங்கேயே கொடுத்துவிட்டேன். எனக்குத் தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் ஒரு மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ சினிமா மட்டும்தான்.

விஜய் சேதுபதி என்ற நடிகனுக்குதான் சினிமாவில் மரியாதை. என் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷமும், எங்கு சென்றாலும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள் என்றால் சினிமா எனக்கு கொடுத்த ஒரு பெரிய பாக்கியமாக பார்க்கிறேன். அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான வாய்ப்பை நண்பர், தோழர், அண்ணன் ஜனநாதன் சார் கொடுத்துள்ளார். இந்த சிந்தனையை அவர் என்னிடம் கூறிய போது முதலில் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

எங்கு சென்றாலும் சினிமா தான் எனக்கு எல்லாமே என சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த சினிமாவுக்கு நாம் என்ன செய்தோம் என ஒன்று உள்ளது. ஒருவர் நாயகனாகிவிட்டால் அவனை மதிக்கிற விதம், கொண்டாடுகிற விதம் என எனக்கு 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் அனைவரிடமுமிருந்து வந்தது. எனது படங்களின் லைட் மேன், அரங்கு அமைப்பாளர்கள் என அனைவருமே மதித்தார்கள்.

'தென்மேற்கு பருவக்காற்று' சமயத்தில் அப்படத்தின் லைட்மேன் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்றேன். எனது முதல் படம், 10 நாட்கள் தான் படப்பிடிப்பு சென்றிருக்கும். அங்கு பெரிய வரவேற்பு கொடுத்து சாப்பாடு போட்டார்கள். அந்த இடத்தில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். எனக்கே இன்னும் திரையுலகில் மரியாதை கிடைக்கவில்லை, அதற்குள் இவ்வளவு மரியாதையா என நினைத்தேன்" என்று பேசினார் விஜய் சேதுபதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in