

கார்த்திக் நரேன் இயக்கும் 'நரகாசுரன்' படத்தில நடிகர் நாக சைதன்யா தேதிகள் ஒத்துவராததால் விலகிவிட்டார். இந்நிலையில் நாக சைதன்யாவுக்குப் பதிலாக 'மாநகரம்' சந்தீப் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'துருவங்கள் பதினாறு' வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் 'நரகாசுரன்'. இதில் அரவிந்த்சுவாமி, ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது.
ஆனால் படப்பிடிப்பு தேதிகள் ஒத்து வராததால் தற்போது நாக சைதன்யா விலகி விட்டார். அவருக்கு பதிலாக, 'யாருடா மகேஷ்', 'மாநகரம்' உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கார்த்திக் நரேன், "சந்தீப்பை புதன் கிழமை இரவு கோவாவில் சந்தித்து கதையைச் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக் கொண்டார். நாங்கள் ஆகஸ்ட் இறுதியிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பித்து செப்டம்பர் மாதத்தில் முடிக்கவுள்ளோம். அடுத்த வருடம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். சந்தீப் கதாபாத்திரத்துக்கு ஒரு ஜோடி இருக்கிறது. அந்த நடிகை தேர்வும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
நாக சைதன்யா மற்ற படங்களுக்காக ஏற்கெனவே தேதிகள் ஒதுக்கியிருப்பதைப் பற்றி எங்களிடம் சொன்னார். வேறெந்த பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தான்"என்றார்.
'நரகாசுரன்' பட போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.