அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் ரஜினிகாந்த்: லாரன்ஸ்

அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் ரஜினிகாந்த்: லாரன்ஸ்
Updated on
1 min read

அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் தான் ரஜினிகாந்த் என்று லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தான் மேற்கொள்ளவிருந்த இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார் ரஜினிகாந்த். இந்த ரத்து, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சமூகவலைத்தளத்தில் பலரும் ரஜினியை கடுமையாக விமர்சித்தார்கள்.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது, "கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.

நான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் என்னுடைய தன்னிகரில்லாத தலைவராகவே இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர்.

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருப்பவர் மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே நபர் அநேகமாக ரஜினியாக மட்டுமாகத் தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும் போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர்.

இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.

சிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள் அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in