

சந்தானத்தின் தந்தை மறைவை ஒட்டி, 'தில்லுக்கு துட்டு' படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்க தேதிகள் ஒதுக்கினார் சந்தானம். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரித்தார். ’தில்லுக்கு துட்டு’ என்று இப்படத்துக்கு தலைப்பிட்டார்கள்.
இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்து வருகிறார். சந்தானம் நாயகனாக நடிக்கும் முதல் பேய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ’தில்லுக்கு துட்டு’ படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜூலை 1-ம் தேதி வெளியீட்டில் இருந்து 'கபாலி' பின்வாங்கியதால், அந்த தேதியில் 'தில்லுக்கு துட்டு' படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்தது. திடீரென்று சந்தானத்தின் தந்தை நீலமேகம் காலமானதால், படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது 'தில்லுக்கு துட்டு' படத்துக்கு பதிலாக 'ஜாக்சன் துரை' வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.