பிறந்தநாளன்று அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் ரஜினி

பிறந்தநாளன்று அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் ரஜினி
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். 12 வருடங்களுக்குப் பிறகு ரஜினி ரசிகர்களை சந்தித்ததால் அந்நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் பாஜகவில் இணைய வேண்டும் என பாஜகவினர் பலரும் வெளிப்படையாக கூறிவந்த நிலையில் ரசிகர்களைச் சந்தித்த முதல் நாளே, "ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்" என ரஜினிகாந்த் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒவ்வொரு நாளும் மிக நெருக்கமாக ஊடகங்களால் கவனிக்கப்பட்டது. கடைசி நாளில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், "போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என வழக்கம்போல் பூடகமாக பேசி வைத்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மும்பையில் 'காலா' படப்பிடிப்பில் ரஜினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். நடிப்பில் மும்முரமாக இருந்தாலும் அரசியல் குறித்து ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் விரைவில் அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது என கெடுபிடி விதிக்கப்பட்டிருந்தாலும் அவரது ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் டிசம்பர் 12-ல் ரஜினிகாந்த் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே கூறுகின்றனர்.

அவருடன் அண்மையில் ஒரு திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர் கூறும்போது, "ரஜினி சில திட்டங்களை வைத்திருக்கிறார். முன்புபோல் இல்லை இப்போது அவர் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார்" என்றார்.

© தி இந்து ஆங்கிலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in