

நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி, பின்னர் ‘மனிதன்’, ‘கெத்து’ என்று சீரியஸான படங்களில் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் நகைச்சுவை படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறார். இப்படத்துக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் பிஸியாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறீர்களே?
வித்தியாசமான படங்களோடு அவ்வப்போது நகைச்சுவைப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ‘சரவணன் இருக்க பயமேன்’ முழுக்க எழில் சார் படம்தான். அவருடைய முந்தைய 3 படங்களின் பாணியிலேயே இந் தப்படமும் இருக்கும். இதுவரை நான் தயாரித்த படங்களில், கொடுத்த பட்ஜெட்டை விடக் கொஞ்சம் அதிகமாக செலவா கும். ஆனால், முதல் முறையாக கொடுத்த பட்ஜெட், சொன்ன நாட்கள் என அனைத்திலுமே குறைவாக முடித்துக் கொடுத்து விட்டார் எழில் சார்.
இதுவரை நான் நடித்த படங் களில் பேயெல் லாம் இருக் காது. இதில் கொஞ்சம் இருக்கிறது. பேயை வைத்துக் காமெடி செய்துள்ளோம். இப்படத்தில் எனக்கு வில்லன் மாதிரியான காமெடி கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார்.
படத்தில் தொப்பி சின்னமெல்லாம் இடம்பெற்றுள்ளதாமே?
கட்சி தொடர்பான சில விஷயங்கள் படத்தில் இருக்கிறது. அதில் சின்னமாகத் தொப்பியை வைத்தோம். ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலை வைத்து நாங்கள் அப்படிப் படமாக்கவில்லை. எங்களுடைய படத்தின் படப்பிடிப்பு முன்பே முடிந்துவிட்டது. அப்பா இந்தப் படத்தைப் பார்த்தபோது, அக்காட்சிகள் வரும் போது சிரித்தார். அப்போதுதான் எங்களுக்கே தெரிந்தது.
நீங்கள் 3 நாட்கள் கழித்து படங்களை விமர்சனம் செய்யச் சொல்லி யுள்ளீர்களே. இது சாத்தியம் என நினைக்கிறீர்களா?
கண்டிப்பாகச் சாத்தியமில்லைதான். படம் நன்றாக இருந்தால் உடனே யும், நன்றாக இல்லை என்றால் மூன்று நாட்கள் கழித்தும் விமர்சனம் செய்யுங்கள் என வேண்டுகோள்தான் வைத்தேன். இன்று சமூக வலைதளத் தின் தாக்கம் மிகவும் பெருகிவிட்டது. ஒரு படத்தின் ரிசல்ட் என்ன என்பது ரிலீஸான நாளிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. இந்நிலையில் 120 ரூபாய் வசூலித்துவிட்டு, படத்தை பற்றி 3 நாட்கள் கழித்துத்தான் பேச வேண்டும் என்பதில் நியாயமில்லைதான்.
பட வெளியீட்டில் இப்போது நிறையச் சிக்கல்கள் இருக்கிறதே. ஒரு தயாரிப்பாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் படம் தயாரிப்பது கொஞ்சம் கடினம் என்றால், வெளியிடுவது மிகவும் கடினம். நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை எடுத்துக் கொள்கிறது. அதை எல்லாம் கடந்து வெளியீட்டு தேதி அறிவித்தால், அதே வேளையில் 5 படங்கள் போட்டிக்கு வருகின்றன. அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதால் படத்தின் வசூல் பாதிக்கிறது. இதனால் 95 சதவீத படங்கள் தோல்வியடைகின்றன. திருட்டு விசிடி, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால் தமிழ் சினிமாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உங்களின் நெருங்கிய நண்பர் விஷால். அப்படி யிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் - நடிகர் சங்கம் என எதிலுமே உங்களைக் காண முடிவதில்லையே?
விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். இப்போதும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. இரண்டு சங்கங்களிலுமே நான் எதற்காகவும் போய் நின்றது கிடையாது. அவர்களுடைய உதவியை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது. அதே போல அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர்கள் அணி என உருவாகிவிட்டதே. அரசியலுக்கு வருவீர்களா?
அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. தாத்தா மற்றும் அப்பா இருவருக்காகவும் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கவனம் தற்போது முழுமையாக சினிமாவில் இருக்கிறது. பின்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும், நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.