

ட்விட்டரில் சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்துகளுக்கு, நடிகர் கமல்ஹாசன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. தற்போது ஜல்லிக்கட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் சென்னையில் கலவரம் வெடித்தது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இப்போராட்டம் நடைபெறும் போது தமிழர்களை பொறுக்கிகள் என கடுமையாக சாடினார். இவருடைய பெயரைக் குறிப்பிடாமல் "ஆம். நான் தமிழ் பொறுக்கி தான். எங்கே பொறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால், டெல்லிக்கு சென்று பொறுக்கவில்லை" என்று ஒளிப்பதிவாளர் இணையதளத் தொடக்கவிழாவில் கமல் தெரிவித்தார்.
இப்போராட்டம் தொடர்பாக சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கமல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். தன்னுடைய பேச்சில், "முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசியிருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி, "போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என கமல்ஹாசனைப் போன்ற சினிமாக்காரர்கள் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது. மதுரையில், முதல்வர் போராட்டக்காரர்களை சந்திக்கத் தயாராகவே இருந்தார். ஆனால், அங்கு நடந்தது என்ன?" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமலை சாடினார்.
இதற்கு பதிலடியாக கமல் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "நான் சினிமாக்காரன் மட்டுமல்ல தமிழன். இப்போதும் சொல்கிறேன், முதல்வர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும்.
சீசர்களே மக்கள் முன் தலைவணங்கும்போது. முதல்வர் ஏன் தலை வணங்கக்கூடாது. சுப்பிரமணி சுவாமியின் மறைமுக தூண்டுதல்களுக்கு எல்லாம் பதில் அளிக்கத் தேவையில்லை என முடிவு செய்திருக்கிறேன்.
"தெருப் பொறுக்கிகளுக்கு" நல்லோர் துணை இருக்கிறது. காமராஜர், அண்ணா, ராஜாஜி ஆகியோர் துணை இருக்கிறது. மோதி மிதித்து விடு பாப்பா. அமைதியொரு பூடகமான சொல். அமைதி அது பேசாதிருப்பதா, செயலற்றிருப்பதா? தமிழில் எழுதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா." என்று தெரிவித்தார் கமல்.
இவ்விருவரின் சாடலும் ட்விட்டர் தளத்தில் பேசப்பட்டது. மேலும், நேற்று (ஜனவரி 24) பாஜக எம்.பி பொன். ராதாகிருஷ்ணன் கமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.