

என்னை பழிவாங்க வேண்டும் என்றால் அதற்கான நேரம் இதுவல்ல என்று விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள்.
இப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ள சூழலில், விஷால் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் சமூகவலைதளத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளது நினைவுகூரத்தக்கது.
விஷால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பது:
"மறுபடியும் இன்னொரு செய்தி என்னைப் பற்றி தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என தகவல் வந்தது. சகாயம் ஐ.ஏ.எஸ் ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மாணவர்கள் மீது தடியது செய்தது சரி என நான் சொன்னதாக ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ளார்கள். நான் மறுபடியும் சொல்கிறேன். என்னை பழிவாங்க வேண்டும் என்றால் அதற்கான நேரம் இதுவல்ல.
நீங்கள் வேறு ஒரு விஷயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இது ஒரு முக்கியமான விஷயம். மாணவர்களின் போராட்டம் வெற்றியடைகிற நேரத்தில், யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு அது நோக்கமல்ல.
இன்றைக்கும் சொல்கிறேன். நான் நல்ல செய்தி வரும் என சொன்னது நடந்துவிட்டது. அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளார்கள், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த சமயத்தில் விஷால் இப்படிச் சொன்னான் என ஆளுக்கு ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது.
மாணவர்களின் போராட்டம் சம்பந்தமாக நான் எதுவுமே தவறாக சொல்லவில்லை. சமூகவலைதளம் என்பது வேறு ஒரு திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நடிகரின் பெயரைப் போட்டு நம்பும்படி செய்தி வெளியிட்டு, அதை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார் விஷால்.