

பொங்கல் ரேஸ்லில் ரஜினியின் 'கோச்சடையான்', அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' ஆகிய படங்கள் களம் இறங்குவது உறுதியாகி இருக்கிறது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து வரும் 'ஜில்லா' படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் நேசன். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.
பொங்கல் வெளியீடாக இப்படம் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், பொங்கலுக்கு 'கோச்சடையான்' வெளிவரும் என்று அறிவித்தவுடன் 'வீரம்', 'ஜில்லா' ஆகியவை வெளிவருமா என்று கேள்வி நிலவியது.
'கோச்சடையான்' வெளியீடு அறிவிப்பிற்கு பிறகு, 'வீரம்' வெளிவரும் என்று அறிவித்தது படக்குழு. ஆனால் 'ஜில்லா' நிலைமை என்ன என்பது குறித்து தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸின் ஜித்தன் ரமேஷ், “டிசம்பர் 2ம் வாரத்தில் படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். ஜனவரி 10ம் தேதி படத்தினை வெளியிட பணிகள் நடந்து வருகின்றன” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதனால் பொங்கலுக்கு 'கோச்சடையான்', 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
'ஜில்லா' விநியோக உரிமைகள் அனைத்துமே முடிந்துவிட்டன. 'வீரம்' படத்தின் விநியோக உரிமைகளுக்கு, 'ஆரம்பம்' படத்தின் வெற்றியால் கடும் போட்டி நிலவி வருகிறது. 'கோச்சடையான்' படத்தின் விநியோக உரிமைக்கும், ரஜினி படம் என்பதால் கடுமையான போட்டியிருக்கும்.
ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் படங்கள் ஒரே தேதியில் வெளியிட்டால், விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இறுதிகட்டத்தில் ஏதாவது ஒரு படம் தள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது.