

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சீதக்காதி' படத்தில் மேடைக் கலைஞராக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இணையான பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். 'சீதக்காதி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 25 படமாக 'சீதக்காதி' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 24ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இப்படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "மேடைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்த மேடைக் கலைஞரின் வாழ்க்கை பயணமாக இப்படம் இருக்கும். அவருக்கு துணை என்று யாருமே கதையில் இல்லாததால், படத்தில் நாயகி கிடையாது.
ஆனால், இப்படத்தில் பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்கள். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தைப் போலவே இதிலும் கதை முழுக்க காமெடி இருக்கும். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ச்சனா மற்றும் மெளலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்" என்று தெரிவித்தார்கள்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள 'ஒரு பக்க கதை' படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து, வெளியீட்டு தயாராகவிருப்பது குறிப்பிடத்தக்கது.