

"நடிகர் சங்கத் தேர்தல் குறித்த சமரச முயற்சியிலோ, பேச்சுவார்த்தையிலோ நாங்கள் ஈடுபடப்போவதில்லை. தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெறமாட்டோம். நாங்கள் தேர்தலை சந்திப்பது உறுதி" என்று விஷால் கூறியுள்ளார்.
அக்டோபர் 18-ம் தேதி நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு பிரிவுகளாக களத்தில் இருக்கிறார்கள். இவ்விரண்டு அணிகளுக்கு இடையே சமரச முயற்சி செய்ய திரையுலக சங்கங்கள் களம் இறங்கியுள்ளன.
வரும் சனிக்கிழமை (10/10/2015) அன்று இரு அணியினரையும் அழைத்து பேசி ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட முயற்சிப்பதாக திரையுலக சங்கங்கள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், விஷால் அணியினர் சமரசத்துக்குத் தயாராக இருக்கிறார்களா? தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து விஷாலிடம் கேட்டதற்கு, ''நடிகர் சங்கத் தேர்தல் குறித்த சமரச முயற்சியிலோ, பேச்சுவார்த்தையிலோ நாங்கள் ஈடுபடப்போவதில்லை. தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெறமாட்டோம். நாங்கள் தேர்தலை சந்திப்பது உறுதி.அதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் பின்வாங்க மாட்டோம்'' என்று விஷால் கூறியுள்ளார்.