

ஒத்தை ஆளாக ஐம்பதுபேரை அடிப்பது, மொத்தமுள்ள 60 காட்சிகளில் 30 காட்சிகளில் பஞ்ச் டயலாக் பேசுவது, கோதுமை நிற அழகிகள் தேடிவந்து காதலிப்பது போன்ற காட்சிகள் நிரம்பிய மசாலா படங்களுக்கு நடுவே நேர்த்தியான ஒரு வணிகப் படம் பாண்டிய நாடு.
அமைதியாக, எந்த வம்புக்கும் போகாமல் இருக்கும் நாயகன், யாரும் எதிர்பாராத தருணத்தில் பொங்கியெழுவார். சர்வ சக்தி வாய்ந்த வில்லனை அனாயாசமாகப் பந்தாடி, ரசிகர்களின் இயலாமைக்கு உளவியல் தீனிபோடுவார். இந்த மாதிரியான கதா பாத்திரங்கள் விஷாலுக்கு புதிதல்ல. ஆனால் பாண்டிய நாடு இந்த வழக்கமான கதையைப் போலித்தனம் இல்லாத உணர்ச்சிகள், மிகையற்ற சித்தரிப்பு என்று நம்பகமான விதத்தில் சொல்லியிருக்கிறது. நாயகனின் அப்பாவும் ஹீரோவின் பயணத்தில் இணைந்துகொள்வது புதுமை. அப்பாவுக்குத் தெரியாமல் நாயகனும், நாயகனுக்குத் தெரியாமல் அப்பாவும் வில்லனுக்கு விரிக்கும் வலையும், அதனால் நகரும் திரைக்கதையும் அதைவிடப் புதுமை.
மதுரையில் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்யாணசுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்த மகன் கனிம வளத்துறை அதிகாரி. இளைய மகன் செல்போன் கடை வைத்திருக்கும் சிவகுமார் (விஷால்). சிவா சரியான பயந்தாங்கொள்ளி. அந்த ஊரின் அரசுப்பள்ளி ஆசிரியையான மலர் புடவையில் நடந்து போனால் கடமையில் தவறும் பல கண்களுக்கு மத்தியில், மலரை நெருங்கிக் காதல் சொல்வதில் மட்டும் தைரியம் காட்டுகிறார்.
இதற்கிடையில் 60 அடி கிரானைட் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தில் 300 அடி ஆழத்துக்கு அபகரித்துவிடுகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரி என்ற முறையில் தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்கும் விஷாலின் அண்ணனைச் சாலை விபத்துபோல பாவனை செய்து கொலை செய்துவிடுகிறார்கள். இந்தச் சதியை அறிந்து கொதிக்கும் அப்பா பழிவாங்கத் துடிக்கிறார். அப்பாவின் திட்டம் பற்றி எதுவும் அறியாத சிவாவும் அண்னனுக்காகப் பழிவாங்கக் களம் இறங்குகிறான்.
அப்பா வில்லன் கையில் சிக்கிக்கொள்ள, அப்பாவைக் காப்பாற்றி வில்லனை அழிக்க வேண்டிய நெருக்கடி சிவாவுக்கு. அதை எப்படிச் செய்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவும் நம்பும் விதத்திலும் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். வழக்கமாக மாஸ் ஹீரோக்கள் பண்ணும் சூர சம்ஹார உத்திகள் எதுவும் இல்லாமல் புத்திசாலித்தனத்துடன் நாயகன் காய் நகர்த்துவதும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸும் படத்தை யதார்த்தமான ஆக்ஷன் படமாக்கியிருக்கிறது.
மூக்கு வலிக்கும் அளவுக்கு மசாலா நெடி அடிக்கும் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களின் ரசனைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் மதிப்பளித்துப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். செல்லரித்த தமிழ் ஹீரோயிசத்தை இந்த மாதிரிப் படங்கள் வழியாகவே வழிக்குக் கொண்டுவர முடியும்.
சிவகுமார் கதாபாத்திரத்தில் விஷால் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். லட்சுமி மேனன் தோற்றமும் நடிப்பும் அழகு. ஆனால் குத்தாட்டம் அவருக்குப் பொருந்தவில்லை.
பாரதிராஜா தனது வழக்கமான வசன உச்சரிப்புக்களைத் துறந்துவிட்டு, கதாபாத்திரமாக மாறிப் பேசியிருப்பது ஆறுதல். மகனை இழந்த ஒரு நடுத்தட்டு அப்பாவுக்கான தவிப்புடன் அலைபாயும்போதும் கூலிக்கொலைகாரர்களைத் தேடும்போதும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.
இமான் மதுரை மணத்துடன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையிலும் இயக்குநர் விருப்பத்துக்கேற்ப அடக்கி வாசித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் ஹீரோ என்ற பிம்பம் இருக்கிறது விஷாலுக்கு. போதிய ரசிகர்கள் பலமும் உண்டு. ஆனால் தனது ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிஜமான உணர்ச்சிகளுக்கும், யதார்த்ததுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் துணிச்சலாக நடித்ததோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார். சினிமா இயக்குனரின் ஊடகம் என்று ஹீரோக்கள் முழுமையாக நம்பினால் மட்டுமே பாண்டிய நாடு போன்ற ஆக்ஷன் படங்கள் சாத்தியம்.
தி இந்து விமர்சனக் குழு தீர்ப்பு:
வழக்கமான கதையையும் புத்திசாலித்தனமும் நம்பகத்தன்மையும் கலந்த விறுவிறுப்பான படமாகத் தர முடியும் என்பதைக் காட்டும் பாண்டிய நாடு எல்லாத் தரப்பினரையும் கவரும்.