கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும்: வைரமுத்து விருப்பம்

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும்: வைரமுத்து விருப்பம்
Updated on
1 min read

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமா சார்பில் தேசிய விருதுகளை வென்ற கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜூமுருகன், விமர்சகர் தனஞ்செயன், தயாரிப்பாளர் பிரபு, பாடகர் சுந்தரயர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் இயக்குநர் வைரமுத்து பேசியதாவது:

"‘எந்தப் பக்கம் காணும் போதும் வானம் உண்டு’ என்ற பாடல் வழியே இளைஞர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒரு கிராமத்தில் இருந்து திரைப்படக் கனவுகளோடு புறப்பட்டு ஒரு இளைஞன் சென்னை வருகிறான். அவன் அடைகிற காயம், அவமானம், சிரமம், பசி எல்லாவற்றையும் நான் உணர்ந்திருக்கிறேன். அந்த மாதிரியான இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற பாடல்தான் அது.

கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் எளிய மகனாக பிறந்து தாய்மொழி கல்வியில் தமிழ் கற்றவன், 7 முறை ஜனாதிபதியை சந்திக்க முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உணர்த்துவதே இந்த விருதின் நோக்கமாக நினைக்கிறேன்.

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும். ரசிகனின் ரசனைக்குத்தான் நாங்கள் கலை செய்கிறோம் என்று பல பேர் கூறுகிறார்கள். ரசிகனின் ரசனை தாழ்ந்திருந்தால் எங்களின் கலை தாழ்ந்திருக்கும் என்று சில பேர் கருதுகிறார்கள்.

கலையின் உயரத்துக்குத்தான் ரசிகனை மேல் இழுத்துச் செல்ல வேண்டுமே தவிர ரசிகனின் பள்ளத்துக்கு கலையை இறக்கிவிடக்கூடாது. வானத்தின் உயரத்துக்கு அவர்களை இழுத்துச்செல்ல வேண்டும். ஆகவே, ரசிகனின் ரசனையை குறை சொல்வதை விட்டுவிட்டு, நாம் நம் உயரத்துக்கு ரசிகனை இழுத்து வர வேண்டியதுதான் கலைக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் மேன்மையாகும்” என்று பேசினார் வைரமுத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in