மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை: தீபிகா படுகோன் பேட்டி

மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை: தீபிகா படுகோன் பேட்டி
Updated on
2 min read

‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ படத்துக்காக மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் ஷாரூக்கானும் தீபிகா படுகோனும். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த வாரம் இருவரும் சென்னைக்கு வந்திருந்தார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிஸியாக இருந்த தீபிகா படுகோனைச் சந்தித்தோம்.

‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் எப்படி அமைந்துள்ளது?

இந்தப் படத்தில் மோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மோகினி ஒரு பார் டான்சர். அவளுடைய ஒரே குறிக்கோள் ஒரு நடனப் பள்ளியைத் தொடங்கி குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான்.

இந்த வேடத்தில் நடிப்பதற்காக நான் பார் நடனத்தைப்பற்றி நிறைய புத்தகங்களைப் படித்தேன், முந்தைய படங்களில் வந்த பார் நடனக் காட்சிகளைப் பார்த்தேன், பார் டான்சர்களின் பாடி லாங்குவேஜ் பற்றி அறிந்துகொண்டேன்.

உங்களுக்கும் சென்னை ஏற்கெனவே பரிச்சயமான நகரமா?

எனது சித்தி சென்னையில் பல ஆண்டுகள் இருந்ததால் நான் அடிக்கடி இங்கு வருவேன். அதோடு எனது முதல் மாடலிங்கும் இங்கு தான் நடந்தது. அதனால், எனக்கும் சென்னைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. எனக்குச் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அனைத்து ஊர்களும் ஒன்றுதான். இப்பகுதி மக்களிடையே உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன.

நீங்கள் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தாலும், அது ஒரு அனிமேஷன் திரைப்படம். உங்களை எப்போது நேரடி தமிழ் படத்தில் பார்ப்பது?

நல்ல கதாபாத்திரம் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு வரவில்லை என்பதுதான் உண்மை.

உங்களுக்கும், ரஜினி குடும்பத்துக்கும் நல்ல நெருக்கம் உள்ளதாக கேள்விப்பட்டோமே?

ஆமாம். அவர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல நடத்துவார்கள். ரஜினி சார், சவுந்தர்யா, ஐஸ்வர்யா எல்லோரிடமும் எனக்கு பல வருடங்களாகப் பழக்கம். சென்னைக்கு வந்தால் எனக்கு அவர்கள் வீட்டில் இருந்துதான் உணவு வரும். அவர்கள் மும்பை வரும்போதெல்லாம் எனக்கு போன் செய்வார்கள். உள்ளூரில் இருந்தால் நானும் அவர்களைச் சந்திப்பேன்.

தமிழ் திரையுலகில் உங்களுக்கு யாருடன் நடிக்க விருப்பம்?

யாரோடு நடிக்கிறேன் என்பதைவிட, படத்தின் கதை எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம். அந்த கதையில் எனது பாத்திரம் எப்படி அமைந்திருக்கிறது என்று பார்ப்பேன். அதற்கு பிறகு படத்தின் இயக்குநர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பேன். அவ்வளவுதான். மற்றபடி குறிப்பிட்ட நடிகர்களோடுதான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. எனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க ரொம்ப ஆசை. ஒரு முறை மணிரத்னம் இயக்கத்தில் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அச்சமயத்தில் முடியாமல் போய்விட்டது. மீண்டும் வாய்ப்பு வருமா என்று காத்திருக்கிறேன்.

‘ஒம் சாந்தி ஒம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, இப்போது ‘ஹேப்பி நியூ இயர்’ என்று ஷாரூக்கானுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது திரையுலக வாழ்க்கை ஷாரூக்கானுடன்தான் தொடங்கியது. நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை என்பதால், அவரிடம் இருந்துதான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரும் சரி, இயக்குநர் ஃபரா கானும் சரி எனது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்கள். இந்தப் படத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, நான் அதன் கதை என்ன என்பதையே கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in