

'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'இரண்டாம் உலகம்', 'பாண்டிய நாடு' ஆகிய படங்களும் தீபாவளி வெளியீடு என்ற அறிவிப்பால் இப்படங்களுக்குத் தியேட்டர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண்டிகை காலங்களில் எப்போது பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு கல்லா கட்டுவது இயல்பு. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'இரண்டாம் உலகம்' மற்றும் 'பாண்டியநாடு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். அப்படங்கள் என்ன நிலையில் இருக்கின்றன, இசை வெளியீடு எப்போது என்பது பற்றிய ஒரு பார்வை.
ஆரம்பம் : தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு தியேட்டர் ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட படம். அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், படப்பிடிப்பும் இன்னும் முடியவில்லை. இன்னும் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இசை வெளியீட்டு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
ஆல் இன் ஆல் அழகுராஜா : இப்படத்திற்கும் தியேட்டர் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். இசை வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. ராஜேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் என்பதால் காமெடிக்கு உத்திரவாதம் இருக்கும்.
இரண்டாம் உலகம் : தீபாவளி வெளியீடு என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படம். ஆர்யா, அனுஷ்கா நடித்து இருக்கும் இப்படத்தினை செல்வராகவன் இயக்கி இருக்கிறார். பி.வி.பி சினிமாஸ் தயாரித்து இருக்கிறது. ஆர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் பெரிய பட்ஜெட் படம் இது. இசை வெளியீடு முடிந்துவிட்டாலும், கிராஃபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் தாமதமானது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பாண்டிய நாடு : தீபாவளி வெளியீடு என்று பூஜை போடப்பட்ட அன்றே அறிவிக்கப்பட்ட படம். விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிக்க, சுசீந்திரன் இயக்குகிறார். விஷால் தயாரிப்பில் வெளிவரும் முதல் படம் இது. இப்படமும் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு இம்மாத இறுதியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள நான்கு படங்களுமே தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், தியேட்டர் அதிபர்கள் மத்தியில் இரண்டு படங்கள் வந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று பேச்சு நிலவுகிறது. 'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களுக்கு தியேட்டர் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன.
'இரண்டாம் உலகம்', 'பாண்டியநாடு' ஆகிய படங்களுக்கு இன்னும் திரையரங்கு ஒப்பந்தம் ஆரம்பமாகவில்லை. ஆனால் போதுமான திரையரங்குகள் சாத்தியமில்லை என்பதால், இப்படங்கள் தீபாவளிக்கு பண்டிகைக்கு பிறகு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஆனால், விநியோகஸ்தர்களின் போதுமான கருத்து “சென்சார் முடிந்து எந்த படத்திற்கு எல்லாம் 'யு' சான்றிதழ் கிடைக்கிறதோ அப்படங்களுக்கு தான் முன்னுரிமை” என்று கூறுகிறார்கள்.