

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கு 'சட்டென்று மாறுது வானிலை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
சிம்புவை வைத்து இயக்கும் படத்தின் பணிகளை உற்சாகமாக மேற்கொண்டு வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். சூர்யா படம் டிராப்பானதைத் தொடர்ந்து சோகத்தில் தவழ்ந்தவருக்கு, கைக் கொடுத்து தூக்கி விட்டார் சிம்பு.
அஜித் படத்தின் பணிகள் பிப்ரவரி மாதம் முதல் துவங்குவதால், சிம்பு படத்தின் பணிகளை வேகமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
சிம்பு நாயகன், பல்லவி சுபாஷ் நாயகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், படத்திற்கு பெயர் சூட்டாமல் இருந்தார் கெளதம் மேனன்.
ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்திருக்கும் முதல் பாடலை டிசம்பர் 8ம் தேதி முதல் படமாக்க இருக்கும் நிலையில், ’சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
கெளதம் - சூர்யா இணைப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான ‘நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலில் வரும் வரியை, சிம்பு படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் கெளதம்.
சிம்புவால் நிகழ்ந்திருக்கிறது கெளதம் மேனனுக்கு ஒரு வானிலை மாற்றம்!