

படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனமும், நன்றாக இல்லை என்றால் 3 நாட்கள் கழித்து விமர்சனம் செய்யும்படி உதயநிதி ஸ்டாலின் விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. எழில் இயக்கியுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் லிவிங்ஸ்டன் பேசும் போது, "எல்லா படங்களையும் நான் திரையரங்கில் தான் பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் பத்து தடவை வரை பார்ப்பேன். மற்றவர்களை பார்க்க பரிந்துரை செய்வேன். நல்லா இல்லைனா திட்டிக் கொண்டே வருவேன். தியேட்டர் டிக்கட், கேண்டீன் விலை எல்லாம் குறைத்தால் நிறைய மக்கள் படம் பார்க்க வருவார்கள்" என்று பேசினார்.
சூரி பேசும் போது "இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். என் மனைவிதான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார். உதயநிதி நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு, மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்" என்றார்.
இயக்குநர் எழில் பேசும் போது, "இமான் ஒரு உணவுப்பிரியர். பாடல் பதிவுக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், யுகபாரதியும் சேர்ந்து விட்டால் சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குனர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, மாற வேண்டும்" என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, "’எம்புட்டு இருக்குது ஆசை’ பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். 'கெளரவ் படம்', 'பொதுவாக எம்மனசு தங்கம்' தொடர்ந்து மூன்றாவதாக ஒப்பந்தமான படம் தான் 'சரவணன் இருக்க பயமேன்'. ஆனால் இப்படம் தான் முதலில் வெளியாகவுள்ளது. காரணம் எழில் சாரின் வேகம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள். நன்றாக இல்லை என்றால் 3 நாட்கள் கழித்து எழுதுங்கள்" என்று பேசினார்.