

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட மற்றும் சின்னத்திரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீடு வழங்க வேண்டும், திருட்டு விசிடி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க பெப்சி முடிவு செய்தது. அதன்படி, சென்னையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
ஆட்டம், பாட்டு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து காலை 10 மணிக்கு பேரணியை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார். பெப்சி அமைப்பின் தலைவர் அமீர், செய லாளர் ஜி.சிவா, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செய லாளர் ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சங்கம், ஸ்டண்ட் இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் நடிகர் யூனியன், ஒளிப்பதிவாளர் சங்கம், மகளிர் ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் நடனம் ஆடி, பாட்டுப் பாடி ஆரவாரத்தோடு சென்றனர். புதுப்பேட்டை பாலம் அருகே பேரணி முடிவடைந்தது.
பின்னர், அமீர், ஜி.சிவா, விக்ரமன், எஸ்.ஆர்.சந்திரன், எடிட் டர் சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்துக்கு சென்று, முதல்வர் ஜெயலலிதாவைச் சந் தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
திரைப்படத் தொழிலாளர்களின் பேரணியால் புதுப்பேட்டை, எழும் பூர், சிந்தாதிரிப்பேட்டை, பாந்தியன் சாலை, காவல் ஆணையர் அலுவலக சாலை மற்றும் அண்ணா சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை ஆகிய இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.