

'லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' பாணியில் 'மகாபாரதம்' எடுக்க ஆசைப்படுவதாக நடிகர் மற்றும் இயக்குநர் பிரபுதேவா தெரிவித்திருக்கிறார்.
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் உருவாகி வரும் படம் 'DEVI(L)'. இப்படத்துக்கு ஹாலிவுட் கதாசிரியர் பவுல் ஆரோன் விஜய்யுடன் இணைந்து கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்து, தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருவது குறித்து பிரபுதேவா, "இயக்குனர் விஜய்யின் சிறப்பே இக்கட்டான சூழ்நிலைகளை பொறுமையாகவும், அழகாகவும் கையாளும் திறமை தான். 'எப்படி உங்களால் மட்டும் எல்லா காரியங்களையும் கூலாக செய்ய முடிகிறது?' என்று அவரிடம் நான் பல தடவை வெளிப்படையாகவே கேட்டிருக்கிறேன்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதை ஒரு நல்ல எண்ணத்தோடு அணுகி, இரவும் பகலுமாக உழைத்து வருவதே விஜய்யின் சிறப்பம்சம்.
பல சுவாரசியங்களும், திருப்பங்களும் நிறைந்த இந்த DEVI(L) திரைப்படம் எங்கள் படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சிறந்த அடையாளமாக அமையும் என நம்புகிறோம்.
பல்வேறு மொழிகளை தாண்டி, கலைஞர்களை ஒன்று சேர்க்கும் வலிமை சினிமாவிற்கு மட்டும் தான் உண்டு. அந்த வகையில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளும் எனக்கு தாய் மொழி தான். மக்கள் விருப்பம் என்பதை தாண்டி, எனக்கென்று ஒரு கனவு படம் இருக்கிறது. நமது பண்டையகால மகாபாரதத்தை, புகழ் பெற்ற ஹாலிவுட் சினிமாவான 'லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' படத்திற்கு இணையாக எடுப்பது என் கனவு" என்று தெரிவித்திருக்கிறார் பிரபுதேவா.