ஸ்ருதிஹாசன் கூறும் காரணங்கள் தவறானவை: சங்கமித்ரா படக்குழு

ஸ்ருதிஹாசன் கூறும் காரணங்கள் தவறானவை: சங்கமித்ரா படக்குழு
Updated on
1 min read

'சங்கமித்ரா' படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறியுள்ள தகவல்கள் தவறானவை எனப் படக்குழு தெரிவித்தது.

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர்.

இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் விடுத்த அறிக்கையில், "துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார்.

இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.ஆனால், முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்" என்று தெரிவித்திருந்தார்.

ஸ்ருதிஹாசனின் அறிக்கை குறித்து 'சங்கமித்ரா' படக்குழுவினரிடம் விசாரித்த போது, "ஸ்ருதிஹாசனை படத்தின் நடிகர்கள் பட்டியலிலிருந்து இயக்குநர்கள் குழு நீக்கியுள்ளது. அதற்கான காரணத்தை கூற விரும்பவில்லை. ஆனால், ஸ்ருதிஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் தவறானவை"

மற்ற நடிகர்கள் அனைவரிடமும் முழுமையாக கதையைக் கூறி தான் ஓப்பந்தம் செய்துள்ளோம். இதிலிருந்தே யார் மீது தவறிருக்கிறது எனத் தெரிந்திருக்கும். சுமார் 2 வருடங்களுக்கு மேலாக படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகையால், இது குறித்து மென்மேலும் பேச விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார்கள்.

தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in