

‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து ‘சிங்கம் 3’ படத்தின் இசையமைப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அப்படத்தின் முதல் பாடலுக்காக பாடலாசிரியர் பா.விஜய்யுடன் பணியாற்றி வந்தவரை சந்தித்தோம்..
நீங்கள் இப்போதெல்லாம் நிறையப் படங்களுக்கு இசையமைப்பதில்லையே?
வருடத்துக்கு 3 படங்களுக்கு மேல் நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனென்றால் ஒரு படத்தில் இசையமைப்பாளராக மட்டுமன்றி, டைட்டில் கார்டில் வரும் இதர 4 பணிகளையும் நான் செய்து கொண்டிருக்கிறேன். ‘இருமுகன்’ படத்துக்கு டிடிஎஸ் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். அது இசையமைப்பாளரின் பணியல்ல.
அருமையாக சமைத்தால் மட்டும் போதாது, அதை அருமையாக பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பரிமாறுவது சரியில்லை என்றால், அருமையான சாப்பாடு கூட உங்களுக்கு சுவையில்லாமல் போகலாம். இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, எனது முதல் படத்தில் இருந்தே படத்தின் இறுதிப் பணிகள் வரை ஈடுபாடு காட்டி வருகிறேன். நான் செய்யும் வேலைக்கு வருடத்துக்கு 3 படங்களே வேகம் என்று சொல்வேன்.
மற்ற இசையமைப்பாளர்கள் போல நீங்கள் பாடுவது இல்லையே?
இசை என்பது ஒரு மிகப்பெரிய சமுத்திரம். அதில் போய் மீன்பிடித்து வரவே எனக்கு நேரம் இல்லை. அதில் கப்பல் செய்துவிட இன்னும் அதிக நேரம் எடுக்கும். இங்கு திறமை வாய்ந்த பாடகர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வருடத்துக்கு 10 பேர் பாடகர்களாக வருகிறார்கள். இங்கு விருந்தாளிகள் நிறை யப் பேர் இருக் கிறார்கள், சாப்பாடு குறைவாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நானே சமைத்து, சாப்பிடு வது சரியான முறையில்லை.
உங்களுடைய ‘ஸ்டுடியோ ஹெச்’ ஒலிப்பதிவு கூடத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...
உலகில் உள்ள 10 சிறந்த ஒலிப்பதிவு கூடங்களில் ஒன் றாக என் ஒலிப்பதிவு கூடம் சான்றிதழ் பெற்றிருக்கிறது. 70 முதல் 80 பேர் அமர்ந்து வாசிக்கும் அளவுக்கு இதை உருவாக்கி உள்ளேன். என் ஒலிப்பதிவு கூடம் மூலமாக நிறைய கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மிகத் துல்லியமான ஒலிப்பதிவு கூடம் அது. ஒரு பாடலுக்கு சுமார் 500 முதல் 600 ட்ராக்ஸ் வரை ஒலிப்பதிவு செய்யலாம். ‘இருமுகன்' படத்தின் பின்னணி இசையை அங்குதான் செய்தேன். எனது சொந்த உபயோகத்துக்கு பிறகு வெளியேவும் கொடுக்கலாம் என்ற எண்ணமிருக்கிறது. அதற்கான வேலை களை செய்துக் கொண்டிருக் கிறேன்.
தென்னிந்தியாவில் ஒலிப்பதிவின் தரம் உயர்ந்துவிட்டதாக கருதுகிறீர்களா?
நான் கீ-போர்டு வாசிப்பாளர் மற்றும் சவுண்ட் டிசைனராகவும் இருந்ததால் ஒலிப்பதிவில் அதிக கவனம் செலுத்துவேன். வெளிநாடுகளில் நமது பாடல்களைக் கேட்கும்போது தரத்துடன் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஒலிப்பதிவின் தரம் மிகவும் முக்கியம். இன்றைக்கு அவர்களை விட நாம் குறைந்தவர்கள் அல்ல என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். ஒலிப்பதிவில் நாம் ஹாலிவுட் படங்களைத் தாண்டிவிட்டோம் என்றே சொல்வேன்.
உங்களுடைய ஆல்பங்களில் மெலடி பாடல்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகிறதே?
மெலடி பாடல்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது, நானே நமக்கு அதுதான் சரியாக வருமோ என்று நினைத்துக் கொள்கிறேன். ‘வசீகரா’ பாடல் பதிவுக்கு முன்பு நான் மெலடி பாடல்கள் பண்ணுவேன் என்ற நம்பிக்கையே எனக்கு கிடையாது. மக்களிடையே வரவேற்பு கிடைத்தவுடன், ஒவ்வொரு ஆல்பத்திலும் 2 மெலடி பாடல்கள் வைத்துவிடுகிறேன். மக்கள் விரும்புவதை நான் கொடுக்கிறேன். அவ்வளவுதான்.
உங்கள் பாடல்களுக்கு பாடகரை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒரு பாடலுக்கான இசையை உருவாக்கும் போதே, குரல் மட்டும் தோன்றும். அந்த குரலுக்கு பெயரே இருக்காது. எந்தப் பாடகர் பாடினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன். எனக்கு தோன்றிய குரல், யாருடைய குரலோடு ஒன்றாக இருக் கிறது என பார்ப்பேன். என்னிடம் குரல் தேர்வுக்காக வந்த சிடிக்கள் 2000 வரை இருக்கும். அந்த சிடியில் ஒரு குரல் சரியாக இருக்கும்.
அவர்கள் முதல் நாள் வந்தவுடன், திறமை இருந்தாலும் பயத்தில் தவறாக பாடுவார்கள். அதை வைத்து நான் கணிக்க மாட்டேன். அடுத்த நாளும் வரச் சொல்லி பாட வைப்பேன். முதல் நாளை விட 2-ம் நாள் இன்னும் கொஞ்சம் நன்றாக பாடுவார். 3-ம் நாளும் வரச் சொல்வேன். அவரும் பழக்கமாகி நன்றாக பாடுவார். அப்போது தான் பாடல் ஒலிப்பதிவை செய்வேன். புது பாடகர்களுக்கான அவகாசத்தைக் கொடுத்து ஒலிப்பதிவு செய்வது என் பாணி!