

மே மாதத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ப.பாண்டி'. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை கே.பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்வைத்து நேற்று (ஏப்ரல் 13) ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ்.
ட்விட்டரில் தனுஷ் அளித்த பதில்களின் தொகுப்பு:
* இயக்கத்தில் முதல் படத்துக்கு கிடைக்கும் வரவேற்புக்காக காத்திருக்கிறேன். இன்னும் 2-வது படம் குறித்து முடிவு செய்யவில்லை.
* செல்வராகவனின் இயக்கத்தில் விரைவில் படமொன்றில் நடிக்கவுள்ளேன்.
* 'வேலையில்லா பட்டதாரி ' படத்தின் 2-ம் பாகம் முதல் பாகத்தைப் போலவே பொழுதுபோக்காக இருக்கும். அதை நான் உறுதியாக சொல்ல முடியும். கண்டிப்பாக காஜல் மேடம் அனைவரையும் கவர்வார்.
* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு அக்டோபர் மாதம் முதல் தேதிகள் ஒதுக்கியுள்ளேன்.
* 'ப.பாண்டி' படத்தைப் பார்த்துவிட்டு செல்வராகவன் என்ன சொல்வார் என்பதற்காக காத்திருக்கிறேன்.
* மே மாதம் முதல் நான் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
* 'மாரி 2' படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.
* 'ப.பாண்டி' பார்த்துவிட்டு எனது அம்மா கட்டியணைத்து அழுதது மறக்க முடியாது.
* ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.
* 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் யார் என்பது எனக்கே இன்னும் தெரியாது.