

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
டி.ஆர்.ராமண்ணா இயக்கி எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' படத்தில் வள்ளி கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகில் ஜோதிலட்சுமி அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் சில படங்களிலும், பாடல்களிலும் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெண்ணியம் சார்ந்த படங்களிலும் நடித்த ஜோதிலட்சுமி நடனப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் திங்கட்கிழமை இரவு காலமானார்.
இவர், நடிகை ஜெயமாலினியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமிக்கு ஜோதி மீனா என்ற மகள் உள்ளார்.
ஜோதிலட்சுமியின் உடல் தி.நகர் ராமராவ் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.