

தனது புதிய படம் ‘மாம்’ வெள்ளித்திரை காணவுள்ள வேளையில் தன் அம்மா குறித்த தனது அழியா நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை ஸ்ரீதேவி.
வளரும் காலங்களில் ஸ்ரீதேவி அம்மாச் செல்லம்தான். இன்று அவர் 300 படங்களில் நடித்து முடித்த மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். தொலைக்காட்சியில் பழைய தமிழ்ப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீதேவிக்கு அவரது அம்மா நினைவு வருகிறது. ஷூட்டிங்குக்கு ஸ்ரீதேவியுடன் அவரது தாயார் எப்போதுமே வருவது வழக்கம்.
சென்னையில் பேட்டியளித்த ஸ்ரீதேவி வலுவான கதாபாத்திரங்கள் குறித்து பேசினார். ஒரு படம் செய்ய வேண்டும் என்பதற்காக படம் நடிப்பதில்லை என்பதை வலியுறுத்தினார் ஸ்ரீதேவி.
அவர் அளித்த பேட்டி:
மாம் படம் கசப்புணர்வும் இனிமையும் கலந்த தாய்-மகள் உறவு குறித்த படம். இப்போது நீங்கள் ஒரு அம்மா என்பதால் இந்தப் படத்துடன் சிறந்த முறையில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததா?
ஆம். அம்மாவாக அந்த கதாபாத்திரத்தின் வலியை புரிந்து கொள்ள உதவியது. தேவகி (மாம் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கும் பாத்திரத்தின் பெயர்), கதாபத்திரத்துடனும் அவருக்கு என்ன நடக்கிறது என்பதுடனும் என்னால் ஒட்ட முடிகிறது. ஆனால் இந்தப் படம் அம்மா பற்றியது மட்டுமல்ல. இது மகளைப்பற்றியதும்தான். பதின்ம வயதில் என்ன நடக்கிறது என்பதும் இதில் முக்கியம். இது அனைவருக்குமான படமும்தான்.
இங்கிலிஷ் விங்லிஷ் ஷசியும் தேவ்கியும் ஒன்றோ?
ஒவ்வொரு கதாபாத்திரமுமே எனக்கு சிறப்பு வாய்ந்ததே. எனக்கு அத்தகைய அற்புதமான பாத்திரங்களை அளிக்கும் இயக்குநர்களுக்குத்தான் அந்தப் பெருமை போய்ச் சேர வேண்டும்.
மாம் படத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது எது?
அந்தக் கதைக்கரு. அது என்னை வெகுவாக பாதித்தது. அது என்னை நெகிழச் செய்தது. எனக்கு அந்தப் பாத்திரம் பற்றிய நல்லுணர்வு ஏற்பட்டது. நான் எப்போதுமே எனது இயல்பூக்கங்கள் வழி செல்வேன்.
படத்தை தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறீர்களா?
படம் பண்ண வேண்டுமே என்பதற்காக நடிப்பதில்லை. மாம் படத்தை நான் தேர்வு செய்ய இதுதான் காரணம்.
மொழியைக் கடந்து பெண்களை மையமாகக் கொள்ளும் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது இல்லையா...
தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புதிய விஷயங்களைக் கொண்டு வர விரும்புகின்றனர். கதாநாயகி மையப் படங்களான, பிக்கு, கஹானி, குயீன், இங்கிலிஷ் விங்கிலிஷ் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. திரைத்துறையில் இப்போது நடிப்பது அருமையான காலக்கட்டமாகும். சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இப்பொது பெறுவது என் அதிர்ஷ்டமே.
கதாநாயகி மையப் படங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடித்ததை விட இப்போது நடிப்பது ஓரளவுக்கு சவுரியமாக உள்ளதா?
அப்போதும் கூட பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்ததை நினைவுகூருகிறேன். உதாரணமாக சால்பாஸ், சாந்தினி, நாகினா. காயத்ரி போன்ற தமிழ்ப்படங்களிலும் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். அந்தக் காலக்கட்டம் அதற்கேயுரிய அழகைக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நல்ல கதைகள் வருகிறது, நல்ல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மிகவும் சிறிய வயதிலேயே வெற்றியை ருசித்துள்ளீர்கள், தோல்விகள் ஏற்படும் போது எப்படி உணர்வீர்கள்?
திரைத்துறைக்கு வந்து விட்டால் வெற்றி தோல்வி இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
மாம் உங்களது 300-வது படம். நீங்கள் நடித்த பழைய படங்களைப் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
மிக அழகான நினைவுகள் உள்ளன. முதலில் நினைவுக்கு வருவது என் அம்மா. பல ஷூட்டிங்குகளில் அவர் என்னுடன் இருந்துள்ளார்.
நீங்கள் நடித்த பழைய தமிழ் படத்தில் உங்களுக்குப் பிடித்த நீங்கள் நடித்த கதாபாத்திரம்..
கே.பாலச்சந்தர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார், மூன்று முடிச்சு படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். மூன்றாம் பிறை படமும் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீதேவியை தமிழ்ப்படங்களில் எப்போது பார்க்க முடியும்?
நல்ல கதை வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்வேன்.
மாம் என்றால் தமிழில் அம்மா, ஆனால் தமிழ்நாட்டில் அம்மா என்றால் அது ஒரு நபரைத்தான் குறிக்கும் அது ஜெயலலிதா. ஜெயலலிதா வாழ்க்கையை படமாக எடுத்தால் அவர் ரோலில் நீங்கள் நடிப்பீர்களா?
அவரைப் போன்ற ஒரு ஆளுமை கொண்டவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்புமிக்க பணியாகும். அத்தகைய கதாபாத்திரத்துக்கு நான் இவ்வளவு விரைவில் நியாயம் வழங்க முடியாது என்று உணர்கிறேன். ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது ஜெயலலிதாவை இறைவியாகவே கருதினேன். அவருடன் உரையாடிய கணங்கள் குறித்த இனிய நினைவுகள் இப்போதும் என்னிடம் அழியாமல் இருக்கிறது.