

'பிருந்தாவனம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக், தான்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிருந்தாவனம்'. படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஷான் சுதர்சன் தயாரித்து வருகிறார்.
மே மாதத்தில் வெளியிட இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், 'பிருந்தாவனம்' படத்தைத் தொடர்ந்து, அடுத்து ராதாமோகன் இயக்கவுள்ள படத்திலும் அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ளார். மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறித்து அருள்நிதி "'பிருந்தாவனம்' படம் அருமையாக வந்துள்ளது. அப்படத்தின் மூலம் எனக்கும், ராதா மோகனுக்கும் இடையே நல்ல புரிதல் உருவாகியுள்ளது.
தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்கவுள்ளோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் அருள்நிதி.