

“நவீன காலத்தில் இயக்குநர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது” என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலாஜிசக்திவேல், கார்த்திக் சுப்பாராஜ், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியபோது,
‘‘இந்தபடத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் ‘பீட்ஸா’ படம் பார்த்தேன். அதிகப் பணம் செலவு செய்யாமல் மூளையை மட்டும் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம். அப்போது படங்களில் அலங்காரம் மட்டுமே அதிகம். தற் போதைய நவீன கால சினிமாக் களில் இயக்குநர்களின் ஆதிக்கம் அதிகம். மதுரையை மையமாக வைத்து படம் எடுப்பது சந்தோஷ மாக இருக்கிறது. கொஞ்சம் வன்முறையைக் குறைத்திருக் கலாம். நான் பார்த்த மதுரை அடிதடியான மதுரை இல்லை.
சமூக அக்கறையுள்ள படங்களை எடுக்க தவறி விடக்கூடாது. எனக்கு பிடித்த நடிகர் நானா படேகர். அதேபோல, சித்தார்த்தின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. அவர், வேறு மொழிப்பக்கம் ஓடாமல் தமிழில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியபோது,
‘‘பிசினஸ் பண்ணுவதில் ரெண்டு வகை உண்டு. ஒன்று யதார்த்தமான பிசினஸ். இன்னொன்று மூளையைக் கசக்கி செய்யும் பிசினஸ். யதார்த்தம் என்பது எதுவுமே தெரியாமல் செய்வது என்று அர்த்தம் இல்லை. அதேபோல மூளையைக் கசக்கிக்கொண்டு என்பது என்ன செய்வது என்பது தெரியாமல் வேலை பார்ப்பது என்பதில்லை. இது இரண்டையும் புரிந்துகொண்டு ஒரு கலை, ஒரு படம் அமைந்தால்தான் அந்தப்படம் வெற்றி பெரும். அந்த மனநிலை குறும்படம் எடுத்த காலத்தில் இருந்தே கார்த்திக் சுப்பாராஜிடம் இருக்கிறது” என்றார்.
ஜிகிர்தண்டா இசை குறுந்தகடு (சிடி) வெளியிடுகிறார் இயக்குநர் பாரதிராஜா. அருகில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சித்தார்த், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்டோர்.