

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களுடைய தயாரிப்பு படப்பிடிப்புகளில் பெப்சி மற்றும் கோக் பயன்படுத்தப் போவதில்லை என்று சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு, பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார், "நமது விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றிலிருந்து நான் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இனி பெப்ஸி மற்றும் கோக் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என முடிவெடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
சி.வி.குமாரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.