தளபதி, நாயகன் கலவைதான் கபாலி- தயாரிப்பாளர் தாணு தகவல்

தளபதி, நாயகன் கலவைதான் கபாலி- தயாரிப்பாளர் தாணு தகவல்
Updated on
2 min read

’தளபதி' மற்றும் 'நாயகன்' இரண்டுமே கலந்த சுந்தரக் கலவை தான் 'கபாலி' என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். படத்தை தணிக்கைக்கு தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் 'கபாலி' தயாரிப்பாளர் தாணு கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் 'கபாலி' உருவான விதம் உள்ளிட்ட பல விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்.

தாணு அந்நிகழ்ச்சியில் பேசியதாவது:

"'தெறி' படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ரஜினி சார் போன் பண்ணி ஒரு படம் பண்ணலாம் என்றார். நானும் பண்ணலாம் சார் என்று சொன்னேன். நான் ஒரு இயக்குநரை அனுப்புகிறேன், கதையைக் கேளுங்கள் என்று ஒரு பெரிய இயக்குநரை அனுப்பினார். அவர் 10 நிமிடங்கள் மட்டுமே கதையைச் சொன்னார். 10 நிமிட கதையை வைத்து எப்படி முடிவு பண்ண முடியும், 2 மணி நேரம் முழுக் கதையாக சொல்லுங்கள் என்றேன். அதுக்கு நேரமாகும் என்றார்.

இன்னொரு வெற்றி பட இயக்குநர் முதல் பிரதி அடிப்படையில் பண்ணித் தருகிறேன் என்று வந்தார். அப்போது இயக்குநர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கலாம், ஆனால் செலவு நான் பண்ணுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். கெளதம் மேனனை அழைத்து சென்று கதை சொல்ல சொன்னேன். அவர் முழுமையாக கதையை முடிக்க 1 மாதமாகும் என்றார்.

ரஜினி சாரின் மகள் செளந்தர்யா தான் ரஞ்சித்திடம் கதையைக் கேட்டு, இக்கதை நல்லாயிருக்கு கேளுங்கள் அப்பா என்று சாருக்கு அனுப்பி வைத்தார். இருவருக்குமான சந்திப்பு முடிந்தவுடன் ரஜினி சார் "தாணு.. எனக்கு ரஞ்சித் ஒரு லைன் சொன்னார்.. நல்லாயிருக்கு கேட்போமே" என்று சொன்னார். நானும் ரஞ்சித்தை சந்தித்து பேசி கதையை தயார் செய்ய சொன்னேன். அடுத்த ஒரு வாரத்தில் முழுக்கதையையும் தயார் செய்து கொண்டு வந்தார். நானும், ரஜினி சாரும் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டோம். ரஞ்சித் சொல்லி முடித்தவுடன், நான் எழுந்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

டீஸரில் தலையைக் கோதிக் கொண்டு வரும் காட்சி படப்பிடிப்பின் போது அவருக்கு காய்ச்சல். அதனுடன் அக்காட்சியில் அவ்வளவு வேகமாக நடந்து நடித்துக் கொடுத்தார்.

இப்படத்தின் கதையே தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு சென்று அங்கு இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தியது தான். அதனால் பெரும்பாலான காட்சிகளை மலேசியாவில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இது ஒரு ரவுடி கதை தான். 'தளபதி' மற்றும் 'நாயகன்' இரண்டுமே கலந்த சுந்தரக் கலவை தான் 'கபாலி'. படத்தின் தணிக்கைக்குப் பிறகு தான் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும். ஜூலையில் உறுதியாக வெளியீடு, அது மட்டும் சொல்ல முடியும்.

'கபாலி' தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய மொழிகளில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய மொழிகளில் வெளியாகும். பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா வைக்கலாம் என்று திட்டமிட்டு கேட்ட போது, "அதெல்லாம் வேண்டாம். நிறைய பேர் வருவார்கள், சிரமப்படுவார்கள்" என்று சொல்லிவிட்டார். 'கபாலி' படத்தைப் பார்த்துவிட்டு "தாணு. நம்ம 2 பேருக்குமான நட்பு எத்தனை வருடம்?" என்றார். "34 வருடம் இருக்கும்" என்றேன். உடனே "நமது 35 ஆண்டு கால நட்புக்கு 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்துக்கு ஒரு மகுடம் 'கபாலி'" என்றார்.

தாய்லாந்தில் கேளிக்கை நிறைந்த தெரு ஒன்று இருக்கிறது. அந்த தெருவில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு சில காட்சிகள் இருக்கிறது. ரஜினி சார் அங்கு சென்றால் படப்பிடிப்பே நடத்த முடியாது என்று சென்னையில் அந்த தெருவை செட் போட்டு படமாக்கினோம். அப்போது வெளிநாட்டு பெண்கள் சுமார் 500 பேரை அழைத்து நிற்க வைத்தோம். அங்கு படப்பிடிப்பில் அனைவருடன் உட்காந்து பேசி, ஒன்றாக அமர்ந்து பேசுவது என ரஜினி சார் பிரமிக்க வைத்தார்.

'கபாலி'யில் ரஜினி கொஞ்சம் நீளமாக வசனம் பேசும் காட்சி ஒன்று இருக்கிறது. அது அருமையாக வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தில் அரசியல் எல்லாம் கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார் தாணு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in