நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா சரமாரி விமர்சனம்

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா சரமாரி விமர்சனம்
Updated on
1 min read

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நீக்கம் குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீக்கம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சங்க விதிமுறைகள் படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறோம். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஒரு பொது சங்கத்திலும், அறக்கட்டளையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதால் அதை சீர்திருத்தி சங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மூவர் நீக்கத்துக்கு ராதிகா சரத்குமார், நடிகர் சங்க நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ராதிகா சரத்குமார், "நடிகர் சங்கத்தில் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது. ரூ.100 கோடி மோசடி என குற்றச்சாட்டை ஆரம்பித்தீர்கள் விஷால். ஆனால் அதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை, எப்படி மோசடி செய்யப்பட்டது என தெளிவுபடுத்தவும் இல்லை. ஆனால் உறுப்பினர் பதவியை மட்டும் பறித்துள்ளீர்கள்.

நடிகர் சங்கத்தின் இப்போதைய தேவை மிகவும் பக்குவப்பட்ட ஆளுமைகள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்.. விஷால், கார்த்தி இவற்றிற்கு தீர்வுதான் என்ன? கசப்பனுபவங்களை விதைத்துவிட்டு அவற்றை அழிக்க முடியுமா? இதற்கு முந்தைய சூழலில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டபோது அது தொடர்பாக விளக்கமளிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நீங்களும் மன்னிப்பு கோரினீர்கள். விஷால், கார்த்தி அளவுக்கு அதிகமான வெறுப்பை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in