

இந்தியப் படங்கள் குறித்த வெளிநாட்டவரின் பார்வையை மாற்றுவது திரைப்பட இயக்குநர்களுக்கு சவாலாக இருக்கிறது என்று தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் கூறியுள்ளார்.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' ஆகிய மூன்று படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை நிலைநாட்டிக்கொண்டவர் வெற்றிமாறன்.
ஆஸ்கருக்கு அனுப்பப்படும் இந்தியத் திரைப்படங்களில் 15 வருடங்களுக்குப் பிறகு, ஒன்பதாவது தமிழ்ப் படமாகத் தேர்வானது 'விசாரணை'. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியபோதிலும், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் தேர்வாகவில்லை. இதுகுறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெற்றிமாறன்.
89-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதிக்கட்ட படப் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 'விசாரணை' ஆஸ்கர் போட்டியிலிருந்து கடந்த ஆண்டே வெளியேறியது. இதனால் ஏமாற்றம் அடைந்தீர்களா?
இல்லவே இல்லை. படத்தைத் தொடங்கும்போது எங்களிடம் எதுவுமே இல்லை. 85 படங்கள் ஆஸ்கருக்குச் சென்ற நிலையில், பெரும்பாலான ஊடகங்கள் எங்கள் படத்தை அவர்களின் முதன்மைப் பட்டியலில் வைத்திருந்தனர். நாங்கள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினோம்.
ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்தியப் படங்கள் அனைத்தையும் பாலிவுட் படங்களாகவே உணர்கின்றனர். அவர்கள் முழுப்படத்தையும் அமர்ந்து பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடல்கள், நடனம் ஆகியவற்றையும் பார்க்க விரும்புவதில்லை.
அதனால் அதை உடைத்து, அவர்களை திரையரங்கத்துக்கு அழைத்து வருவது என்பது சவாலாகவே இருக்கிறது. 'விசாரணை' படத்தைக்கூட அவர்கள் உடல்ரீதியான மிருகத்தனமான தாக்குதல் கொண்ட படமாகத்தான் பார்க்கின்றனர்.
இயக்கவில்லை; நடத்தினேன்
ஆட்டோ ஓட்டுநராக இருந்த சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்னும் நாவலைப் பின்புலமாக வைத்துதான் 'விசாரணை' படம் எடுக்கப்பட்டது. படம் காவல்துறைக்குள் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் குற்றங்களைப் பற்றிச் சொன்னது. சொல்லப்போனால் 'விசாரணை'யை இயக்குவதற்கு பதிலாக 'விசாரணை' நடத்திக் கொண்டிருந்தேன். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சயம் அதை மதிப்பார்கள்.
எங்களுடைய நோக்கம் அந்த மரியாதையைப் பெறுவதாக மட்டுமே இருந்தது. நாங்கள் வலிமையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். அங்கே ஏராளமான நண்பர்களும் கிடைத்தனர். என்ன ஒரே பிரச்சினை என்றால் இந்தியாவில் 22- 24 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளதை வெளிநாட்டவர்கள் அறியாததுதான்.
நான் ஏன் இந்தி பேசவில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்தியன்; ஆனால் இந்தி பேசமாட்டேன் என்றேன். இதைப் புரிந்துகொள்வது அவர்களுக்குக் கடினமாக உள்ளது.
இளம் இயக்குநர்களுக்கு ஓர் அறிவுரை
இளம் இயக்குநர்கள் பட்ஜெட்டைப் பற்றிக் கவலைப்படாமல், படத்தின் உள்ளடக்கத்தில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள். அதிக பட்ஜெட்டோ, குறைந்த பட்ஜெட்டோ அது பிரச்சினையில்லை. கிறிஸ்டோபர் நோலன் இந்த உத்தியை முதலில் ஆரம்பித்தார்.
நம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்ட சினிமா உலகம்
சினிமா உலகம் நம்பிக்கைளால் ஆனது. காகிதத்தில் உங்கள் எழுத்துக்களின் மீதும், பேசும்போது உங்களின் வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை வைத்து நான் பணத்தை முதலீடு செய்கிறேன். ஏராளமான பணத்தோடு, அனைத்தும் திரும்பி வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரை நம்பவைப்பது மிகப்பெரிய சவால்.
எல்லா இயக்குநர்களுக்குள்ளும் பெரிய பெரிய திட்டங்கள் இருக்கும். ஆனால் அதைச் செயல்படுத்த எல்லோரிடமும் பணம் இருக்காது. குறைந்த அளவு பணத்தை வைத்து, பெரிய அளவிலான ஐடியாக்களைச் செயல்படுத்துவதில்தான் சினிமாவின் சவாலே அடங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக விருதுகளுக்கு அனுப்பப்படும் படங்களுக்கு, அவற்றை விளம்பரப்படுத்தத் தேவையான நிதியை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இச்செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதன்மூலம் வழக்கமான கோணத்துக்கு வெளியேயும் எங்களால் சிந்திக்க முடியும். தியேட்டர் வருமானத்தை மட்டுமே யோசிக்கத் தேவையில்லை. மற்ற வழிகளில் இருந்தும் உங்களால் வருமானத்தை ஈட்ட முடியும். இதுவொரு நல்ல முயற்சி.
உங்களின் அடுத்த திட்டம்?
'விசாரணை' படத்துக்குப் பிறகு நான் கொஞ்சம் கெட்டுப் போயிருக்கிறேன் என நினைக்கிறேன்... எது சரியோ அதைச் செய்ய விரும்புகிறேன். எதை விற்கமுடியுமோ அதை எடுத்துக்கொள்ளும் நிலையில் என் மனம் இருக்கிறது.
தமிழில்: ரமணிபிரபாதேவி