Published : 03 Oct 2013 08:37 AM
Last Updated : 03 Oct 2013 08:37 AM

விமர்சனம் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ரெட் சிக்னலில் படம் ஆரம்பிக்கிறது. அங்கே சுமார் மூஞ்சி குமார் மற்றும் பாலா வர இவர்களைப் பற்றிய கதையைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று பின்னணிக் குரல் ஒலிக்கும்போது பட்டி பாபு, பெயிண்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலர் வர, இவர்களையும் சேர்த்தே படத்தில் பார்க்கப்போகிறீர்கள் என்று சொல்லும் போதே கொஞ்சம் வித்தியாசமான படம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

சுமார் மூஞ்சி குமார் (விஜய் சேதுபதி) குமுதாவைக் (நந்திதா) காதலிக்கிறார், பாலா ரேணுவைக் (ஸ்வாதி) காதலிக்கிறார். இடையில் ஒரு கள்ளக்காதல் கொலை நடக்கிறது. கூடவே இன்னும் சிலர் ஒட்டிக்கொள்ள, இரண்டாம் பாதியில் அனைவரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். இவர்கள் ஏன் சந்திக்கிறார்கள், எதற்காகச் சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை. குடி வேண்டாம் என்று சொல்லும் படம் காந்தி ஜெயந்தி அன்று வெளிவந்திருக்கிறது. ஆனால் படம் முழுவதும் சாராய புட்டிகளின் மத்தியில்தான் நடக்கிறது.

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதிக்கு நிச்சயமாக இந்த படம் அடுத்த கட்டம். படத்தில் சரளமாகப் புழங்கும் சென்னைத் தமிழில் சொன்னால், ‘வேட்டையாடுகிறார்’. ஆனால் சில இடங்களில் சென்னைத் தமிழ் புரியவில்லை.

முதல் பாதியில், அண்ணாச்சியிடம் பஞ்சாயத்துக்குப் போகும் ஒருதலைக் காதல், பேங்க் மேஜேனரிடம் அனைவரும் மாட்டிக்கொள்வது, காதலியிடம் மாட்டிக் கொண்டு சமாளிப்பது உள்ளிட்ட பொழுது போக்குக் காட்சிகள் ரசிக்க்கவைக்கின்றன.

போனில் ‘‘நான் அண்ணாச்சி பேசுறேம்மா” என்று ஊரே நடுங்கும் ரவுடி (பசுபதி) சொல்லும் போது, “மளிகைக் கடை அண்ணாச்சியா?” என்று நந்திதா கேட்பது நகைச்சுவைக்கு ஒரு சோறு பதம். மேலும், “நாஸ்ஸமா இருக்காடா”, “பேச்சுல ரொமான்ஸ் கம்மியா இருக்கே”, “என் கால் நல்லாதானே இருக்கு, என் கால்ல கூட விழலாம்”, “ஒருத்தனை பைத்தியகாரன் ஆக்கனும்னா ஒன்னு அவன் மார்க்கெட்டிங்ல வேலை பார்க்கணும் இல்ல லவ் பண்ணனும். நான் ரெண்டுமே பண்றேன்”... இதுபோலப் பல வசனங்களில் மதன் கார்க்கி,கோகுல் கூட்டணி பிரகாசிக்கிறது.

“பிரேயர் சாங்”தான் இன்னும் சில நாட்க ளுக்கு இளைஞர்களுக்கான கீதமாக இருக்கப்போகிறது. வழக்கமாகப் பெண்க ளைக் கிண்டல் செய்யும் பாடலாக இல்லாமல் புதுமையாக இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இட நெருக்கடியான கதைகளத்திலும் பெரும்பாலான காட்சிகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார்கள். எடிட்டரின் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.

கள்ளக்காதல் கூட்டணியைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொடுக்கப்போவதே சூரிதான் என்று பார்க்கும்போது, நடக்கும் திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தா லும், சூரி வரும் காட்சிகள் வலிந்து சேர்க்கப்பட்டதாகவே தெரிகிறது இது படத்தில் ஒட்டவும் இல்லை, ரசிக்கும்படியாக வும் இல்லை.

இரண்டு காதல், ஒரு கொலை என்று நகைச்சுவையோடு நகரும் திரைக்கதை ரொம்பவே நீளம். அடிப்படையில் வலுவான ஒரு கதையில்லாமல் திரைக்கதையிலேயே படம் நகர்வதால் சமயங்களில் படத்தோடு ஒன்ற முடியவில்லை. மற்றபடி ஆசை யோடு வரும் பார்வையாளர்களை மோசப்படுத்த வில்லை இந்த சுமார் மூஞ்சி குமார்!

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

அனைவரையும் ஈர்க்கும் வித்தியாசமான படமாக வந்திருக்கக்கூடிய படம் திருப்பங் கள் அதிகம் இல்லாத கதையோட்டத்தால் கொஞ்சம் தள்ளாடுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x