பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியீடு: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா

பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியீடு:  மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா
Updated on
2 min read

தனுஷ், அனிருத், டிடி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா.

அவரது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் - த்ரிஷா, அனிருத் - ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு 'இது இவருடைய லீலை' என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது. திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சுசித்ரா, "நான் இதைப் போன்ற மோசமானவற்றை பகிர்வேன் என நினைப்பவர்கள் என்னைத் தொடர வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இது அடிக்கடி நடக்கிறது. எனக்கும் எரிச்சலாக இருக்கிறது.

நான் நடிகர் நடிகைகளுடன் பேசுவதில்லை. அவர்கள் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் இல்ல. இதையெல்லாம் விட, நான் இப்படி இழிவுபடுத்தும் ஆள் கிடையாது.

இதை செய்து கொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்பதே. அதை இப்போது செய்து விடுவேன். ஆனால் இங்கு என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இப்போது முடக்கவுள்ளேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னை வெறுப்பவர்களுக்கு சின்ன எச்சரிக்கை - நீங்களாகவே என்னைத் தொடர்வதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என் கணக்கை ஹேக் செய்தவருக்கும் வேண்டாம். தயவு செய்து தொடராதீர்கள்.

சரிபார்க்கப்பட்ட தகவல்: கணக்கை ஹேக் செய்தவர், அவர் இருக்கும் படத்தையும் சேர்த்து பதிவிட்டால் அவர் மேல் சந்தேகம் வராது என நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் யாரையும் குற்றம் சொல்லப்போவதில்லை. காவல்துறையிடம் புகார் செய்யப்போவதும் இல்லை. வெறுப்பவர்கள் - தயவு செய்து என்னைத் தொடர வேண்டாம். மற்றவர்கள், என் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் இதை வென்று காட்டுவோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 20-ம் தேதி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில், சுசித்ராவின் காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனுஷ் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ட்வீட் இருந்தது..

சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ''சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சுச்சியின் ட்விட்டரில் வெளியான செய்திகள் அனைத்துமே பொய்யானவை. இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும், "புரளிகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். தனுஷ் என்னை தாக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. சற்று கட்டுப்பாடு மீறிச் சென்றது. எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது" என்று சுசித்ரா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in