

திருட்டு டிவிடி வெளியாவதை தடுக்க, 'ரெமோ' படக்குழு புதிய திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி 'ரெமோ' வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
ஒரு படம் தயாரானால் முதலில் வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கும் சென்சார் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியாகும் முன்பே படம் வெளியாகிவிடும். வெளிநாட்டில் முதலில் வெளியாவதால் இந்தியாவில் வெளியாகும் முன்பே படத்தின் விமர்சனம், நாயகன் அறிமுகக் காட்சி மற்றும் திருட்டு டிவிடி உள்ளிட்டவை வெளியாகி விடுவதாக விமர்சனம் நிலவியது.
இதனை தவிர்க்கும் பொருட்டு 'ரெமோ' தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, "24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கொள்கையின்படி எங்களது அனைத்து தயாரிப்புகளும் முதலில் தமிழகத்தில் ரிலீஸ் ஆன பிறகே சர்வதேச அளவில் வெளியிடப்படும். புதிய படங்கள் இணையத்தில் கசிவதை தவிர்ப்பதே முதல் நோக்கம். அதன்படி ரெமோ தமிழகத்தில் அக்டோபர் 7-ல் வெளியாகிறது. இங்கு முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னரே வெளிநாட்டில் வெளியாகிறது" என்று அறிவித்திருக்கிறார்.
மேலும், இணையத்தில் திருட்டுத்தனமாக படங்களைப் பார்ப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வித்திருக்கிறது மும்பை நீதிமன்றம். அதற்கு "மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தியாவிலும் காப்புரிமை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். காப்புரிமை மீறல் பிரச்சினைகளில் சிறு குழுகளையோ தனி நபர்களையோ தண்டிப்பதில் மட்டும் எந்த பயணும் இல்லை. சட்டம் திருத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ராஜா.
இந்த முடிவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.