

பார்த்திபன் இயக்கி, தயாரிக்கும் புதிய படத்துக்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
பார்த்திபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அகிலா கிஷோர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பார்த்திபன்.
சில நாட்களாக தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்ட வந்தார் பார்த்திபன். அதற்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என பெயரிட்டு இருக்கிறார். இப்படம் குறித்து பார்த்திபனிடம் கேட்ட போது, "நானும், தம்பி ராமையாவும் நடிப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. நான் ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன். நாயகன் மற்றும் நாயகி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. சத்யா இசையமைக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் சாயல் இதில் இருக்காது. இது வேறு ஒரு வித்தியாசமான களம். கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும்" என்று தெரிவித்தார்.