

'கோச்சடையான்', 'மான் கராத்தே', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்கள் கோடை விடுமுறைக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்.
கோடை விடுமுறைக்கு ஒவ்வொரு வருடமும் பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும். ஆனால், இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
'கோச்சடையான்', 'மான் கராத்தே', 'நான் சிகப்பு மனிதன்', 'தெனாலிராமன்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்கள் ஏப்ரல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள்.
இதில் 'நான் சிகப்பு மனிதன்' படம் மட்டுமே ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற படங்கள் அனைத்துமே, 'கோச்சடையான்' வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறார்கள். 'கோச்சடையான்' வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள் மற்ற படங்களின் வெளியீட்டு தேதி தெரிந்து விடும்.
ஆனால், இம்முறை கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் படங்கள் அனைத்துமே பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படங்கள். ஆகையால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் கடும் கலக்கத்திற்கு உண்டாகி இருக்கிறார்கள்.
காரணம், 'கோச்சடையான்' வெளியீட்டு தேதி முடிவான உடன் அடுத்த அடுத்த வாரங்களில் வரிசையாக மற்ற படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறு வெளியிட்டால், நன்றாக போய் கொண்டிருக்கும் படத்தின் வசூல் பாதிக்கும் என்பது அவர்களது கவலையாக இருக்கிறது.
மேலே, குறிப்பிட்டுள்ள படங்களோடு சுந்தர்.சி இயக்கி வரும் 'அரண்மனை', வசந்தபாலன் இயக்கி வரும் 'காவியத்தலைவன்', ஷங்கர் இயக்கி வரும் 'ஐ', விஜய் சந்தர் இயக்கி வரும் 'வாலு', பாலாஜி மோகன் இயக்கி வரும் 'வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட சில படங்கள் கோடை விடுமுறை போட்டியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.