

இயக்குநர் கதிரின் பட்டறையிலிருந்து திரைமொழியை கற்றவர் இயக்குநர் அஹ்மத் . இப்போது நடிகர் ஜீவாவை வைத்து ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நவம்பர் மாதம் பட வெளியீடு என்பதால், இசை வெளியீடு, படத்தின் இறுதிப் பணிகள் என்று மும்முரமாக இருந்தவரிடம் பேசினோம்.
ஏற்கெனவே பிரபலமான ஒரு பாட்டின் முதல்வரியை படத்தின் தலைப்பா வச்சுட்டீங்க. என்ன காரனம்?
“இது ரொம்ப ஜாலியான படம். படத்தில ஒவ்வொரு சீனையும் இளைஞர்கள் கொண்டாடுற மாதிரி பண்ணிருக்கேன். அதனால் இந்தப் படத்துக்கு ‘என்றென்றும் புன்னகை’ ங்கிற தலைப்புதான் சரியா இருக்கும்னு தீர்மானிச்சேன். அதான் இந்தப் பெயரையே வச்சுட்டேன்.”
ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆண்ட்ரியான்னு பெரிய டீமா வளைச்சிப் போட்டிருக்கீங்களே?
“ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் பிரவீன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பெயரையும் இந்த வரிசையில் சேர்த்துக்கலாம். இந்த பெரிய டீமை எனக்கு அமைச்சுக் கொடுத்ததுக்கு என் தயாரிப்பாளர்களுக்குதான் நான் நன்றி சொல்லணும். என்னை நம்பி இவ்வளவு பெரிய டீம் கொடுத்ததுக்கு நான் ஹிட் கொடுக்கணும்னு ஒடிக்கிட்டே இருக்கேன்.”
இந்தப் படத்துல ஆண்ட்ரியா க்ளாமரா நடிச்சுருக்காங்கனு சொன்னாங்களே?
“சிலர் படத்தை பார்க்காமல் இஷ்டத்துக்கு நியூஸ் கிரியேட் பண்றாங்க. ஆண்ட்ரியா அந்த மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ணல. படத்தை பாத்து அவங்களோடது என்ன ரோல்னு தெரிஞ்சுக்கோங்க.”
சந்தானம் இந்தப் படத்தைப் பத்தி சொன்னதை வச்சுதான் உதயநிதி உங்க படத்தை வாங்கினார்னு பேச்சு..
“இதுல என்ன சார் தப்பிருக்கு.. ரெட் ஜெயிண்ட் பெரிய நிறுவனம்.. என்னோட என்மேல நம்பிக்கை வைச்சு இப்படி அவர் சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தேங்க்ஸ் சந்தானம்.”
இவ்வளவு பெரிய டீம்னாலே படப்பிடிப்புல நிறைய சுவராசியமான சம்பவங்கள் நடந்திருக்குமே?
“நிறைய நடந்திருக்கு. இப்ப நினைச்சாக் கூட எனக்கு சிரிப்பு வரும். ஜிவா, சந்தானம் ரெண்டு பேரும் சேர்ந்தாலே செட்ல இருக்குற எல்லாரையும் கலாய்ச்சு காலி பண்ணிடுவாங்க. மொத்த டீமும் தினமும் கேலி, கிண்டல், ஜாலின்னு ஒரே கலகலப்பா இருக்கும். இதோட பலன் படத்துல நிச்சயம் தெரியும்.”
படம் ஆரம்பிச்சு மாசக்கணக்காச்சே. ஏன் இவ்வளவு லேட்?
“படத்தோட நடிகர்கள், டெக்னிஷியன்ஸ் எல்லாரும் பிரபலமானவங்க. எல்லோரோட கால்ஷீட் கிடைச்சு ஷுட்டிங் போகணும். ஹாரிஸ் சார் பெரிய மியூசிக் டைரக்டர். பாட்டெல்லாம் சிங்கப்பூர்ல வைச்சு கம்போஸ் பண்ணினோம். யாராலையும் படம் டிலேன்னு சொல்ல முடியாது. படம் வரட்டும்.. பாருங்க. ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லா இருக்கும். 'என்றென்றும் புன்னகை' இளைஞர்களின் புன்னகையா இருக்கும். இத நான் 100% நம்பிக்கையோட சொல்றேன்.”