

பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு, சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் 'நிமிர்ந்து நில்' தேர்வாகியுள்ளது.
ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார் , சூரி மற்றும் பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'நிமிர்ந்து நில்'. சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெற இருக்கும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'நிமிர்ந்து நில்' தேர்வாகியிருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
பெர்லின் திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருப்பது குறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அடுத்த படமான ‘நிமிர்ந்து நில்’ பிப்ரவரி 14 ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
’நிமிர்ந்து நில்’ என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம் .அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப , படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது, மேலும் நல்ல சேதிகள் இந்த வருடம் வர போவது நிச்சயம்.” என்று தெரிவித்துள்ளார்.