Published : 06 Nov 2013 10:58 AM
Last Updated : 06 Nov 2013 10:58 AM

சிறிய படங்களுக்கு மட்டும் முழு வரிவிலக்கு : முதல்வரிடம் பெப்சி அமைப்பு மனு

சினிமா தொழிலாளர் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் மீது பரிசீலித்து முடிவெடுப்பதாக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் அமீர் கூறினார்.

தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பெப்சி அமைப்பு நிர்வாகிகள் மனு கொடுத்தனர். பின்னர், நிருபர்களிடம் அமீர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் கூறியதாவது:

பெப்சி அமைப்பில் உள்ள 24 ஆயிரம் தொழிலாளர்களின் ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை விரைந்து முடிக்கப்பட வேண்டும். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு வீடு, சென்னையில் மீண்டும் ஜெ.ஜெ. திரைப்பட நகரம் அமைக்க வேண்டும். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து 5 கோரிக்கைகளைக் கொடுத்திருக்கிறோம். ‘அவற்றைப் படித்து சரிபார்த்துவிட்டு, உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று முதல்வர் கூறியுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சந்திப்பு என நாங்கள் கருதுகிறோம்.

சென்னையில் படப்படிப்பு நடத்துவதற்கு அனுமதி இல்லை. சிறிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் புதுச்சேரி போன்ற பக்கத்து மாநிலங்களுக்குப் போய் படம் எடுத்தால் கூட பலமடங்கு செலவாகிறது. அதனால், சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்.

வரிவிலக்கு

பெரிய படங்களுக்கு குறைந்தபட்ச வரியை விதித்துவிட்டு, சிறிய படங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வருவார்கள். சீன புத்தாண்டைப் போல் தமிழ் புத்தாண்டையும் வெகு விமரிசையாகக் கொண்டாட முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி…

மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில், திரைப்படத் துறையினரின் பங்களிப்புடன் கூடிய தமிழ் திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒன்றை இங்கும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அவர் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்று அவர்கள் கூறினர்.

முதல்வருடனான சந்திப்பி ன்போது, பெப்சி செயலாளர் சிவா, இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், ஸ்டன்ட் சிவா உள்ளிட்ட பல நிர்வாகிகள் இருந்தனர்.

வெள்ளிவாள் வாங்க மறுப்பு

பெப்சி சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட வாள் ஒன்றை பரிசாக அளித்தனர். அதற்கு முதல்வர், “இப்போது நான் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பெற்றுக்கொள்கிறேன்” என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x