தனுஷின் கொடியில் அனிருத் நீக்கம்: சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம்
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கொடி' படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'தங்கமகன்' படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலன்று படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அப்படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். அப்படத்துக்கு 'கொடி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகிகளாக ஷாம்லி மற்றும் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
முதலில் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக அறிவித்தார்கள். ஆனால், 'பீப்' பாடல் சர்ச்சையில் சிக்கியிருப்பதால் அனிருத் இன்னும் சென்னைக்கு வரவில்லை. விரைவில் சென்னை திரும்ப இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
'கொடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, பாடல்கள் தேவை என்பதால் படத்தின் இசையமைப்பாளராக இருந்த அனிருத் நீக்கப்பட்டு சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
